ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை…

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
ஜனாதிபதி செயலகம்,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
கொழும்பு- 01
அரசாங்க அதிபர்
மாவட்டச் செயலகம்,
கிளிநொச்சி
ஊடாக,
ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, முறிப்புப் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச்சென்ற திரு.சண்முகம் தவசீலன், திரு.கணபதிப்பிள்ளை குமணன் ஆகிய இரு ஊடகவியலாளர்கள் மீது கடந்த 2020.10.12 ஆம் திகதி, திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிப்புப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்கு மரங்கள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதிக்குச் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற வேளை அவ்விரு ஊடகவியலாளர்கள் மீது மரக்கட்த்தல்காரர்கள் தாக்குதல் நடாத்தியுள்ள சம்பவம் இந்த நாட்டின் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும், ஊடக சுதந்திரத்தையும் கேள்விக்குட்படுத்துகின்ற செயலாகும்.
கடந்த காலங்களில் சிவராம், நிமலராஜன் உட்பட்ட 35 இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களும், பிரகீத் எக்நலிகொட போன்ற ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு காணமலாக்கப்பட்டுள்ள சம்பவங்களும் இந்த மண்ணில் அரங்கேறியுள்ள நிலையில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் கூட ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் தொடர்ச்சியாக அரங்கேற்றப்பட்டு வருகின்றமை,  மீளவும் அவ்வாறானதொரு சூழலை ஏற்படுத்தி விடுமோ என்ற ஐயத்தையும், தமக்கும் உயிராபத்துக்கள் ஏற்படக்கூடுமோ என்ற அச்சத்தையும் ஊடகவியலாளர்கள் மத்தியில் உருவாக்;கியுள்ளது.
எனவே, தாங்கள் இந்த நாட்டின் முதல் மனிதன் என்ற வகையில் ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் பொருட்டு இனிவரும் காலங்களிலேனும் ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாதிருக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
இங்ஙனம்,
மக்கள் பணியிலுள்ள,
சிவஞானம் சிறீதரன்
பாராளுமன்ற உறுப்பினர்,
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்,
கிளிநொச்சி
படிகள்
1. கௌரவ.ஹெகலிய ரம்புக்வெல, வெகுசன ஊடக அமைச்சர், கொழும்பு.05
2. கௌரவ.சதாசிவம் வியாழேந்திரன், தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்