மட்டக்களப்பு அரச அதிபரின் திடீர் பதவி நீக்கத்துக்கு மாநகர சபையில் கண்டனம்…

மட்டக்களப்பு மாவட்ட செயலாளராக கடமையாற்றிய திருமதி. கலாமதி பத்மராஜா அவர்கள் அரச அதிபர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும், மயிலத்தனமடு-மாதவனை பகுதியில் வெளி மாவட்டத்திலிருந்து வந்த  காணி அபகரிக்கப்படுவதற்கு எதிராகவும் மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சகல தமிழ் கட்சிகளையும் இதற்காக ஒன்றிணையுமாறும் மாநகர முதல்வர் இதன் போது அழைப்பு விடுத்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 38 ஆவது சபை அமர்வானது இன்று 15.10..2020 (வியாழக்கிழமை) காலை மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

அமர்வின் விசேட அம்சமாக மட்டக்களப்பின் எல்லை பகுதியான மயிலத்தனமடு-மாதவனை போன்ற இடங்களில்  வேறு மாவட்டத்தினர் அத்துமீறி காணி அபகரிப்பில் ஈடுபடுவதனையும் இதற்கு கிழக்கு மாகாண ஆளுநர், மகாவலி அதிகார சபையினர் உள்ளிட்டவர்கள் துணைபோவதனையும் கண்டித்து உறுப்பினர்கள் தமது கருத்துகளை  வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான வேலுப்பிள்ளை தவராசா, விஜயகுமார் பூபாலராஜா, துரைசிங்கம் மதன் ஆகியோர் காணி அபகரிப்புக்குக்கு துணை போகாது தம்முடைய கடமையினை சரியாக செய்த ஓர் அரச அதிபர் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டிருக்கின்றார் என்றும்,  அரசாங்கத்தின் இந்த முறையற்ற நியமனத்துக்கு எதிராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமது கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினர் ரொணி பிரின்சன் தமது கட்சி சார்பாக தாமும்  கண்டனங்களை வெளிப்படுத்துவதாகவும், இது தொடர்பில் தமது கட்சி தலைமைகளும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மேய்ச்சல் தரை பிரச்சனை தொடர்பில் அரச அதிபர் நடுநிலையாக நேர்மையாக எடுத்து குறிப்பிட்டிருந்த நிலையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுளார்.  இது வரை மகாவலி அதிகாரசபை தனது 10 திட்டங்களில் சிங்களவர்களுக்கு  96.16% வீதமும்,  தமிழர்களுக்கு 1.42% வீதமுமே காணிகளை வழங்கி உள்ளது. இது ஒரு இனத்தின் குடிப்பரம்பலினை அதிகாரிக்கும் செயற்பாடாகும். இதற்கு எதிராக கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் மாநகர முதல்வர் அழைப்பு விடுத்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.