20ஆவது திருத்தம் இப்போது எதற்கு? – அரசிடம் சம்பந்தன் கேள்வி…

“நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

அரசமைப்பின் 20வது திருத்தத்தை எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள நேற்றுமுன்தினம் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் 20ஆவது திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் எதிர்வரும் 20ஆம் திகதி சபாநாயகரினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள அனைத்து சரத்துக்களையும் நாடாளுமன்றத்தின் அனுமதியுடன் மட்டும் நிறைவேற்ற உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. முக்கிய நான்கு சரத்துக்களுக்கு மக்கள் ஆணை பெற சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரமே 20ஆவது திருத்தத்தை அரசு கையாள வேண்டும். எனினும்,  நாட்டின் தற்போதைய நிலைமை அதற்குச் சாதகமாக இல்லை.

கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் நாடு சிக்குண்டு இருக்கையில் 20ஆவது திருத்தம் விவகாரத்தில் அரசு ஏன் அவசரம் காட்டுகின்றது? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

எனவே, நாட்டின் தற்போதைய அசாதாரண நிலைமையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்