நாடெங்கும் சமூகத் தொற்றாக கொரோனா மாற்றம்; ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று அழைக்காதீர்! – முன்னாள் சபாநாயகர் கரு வேண்டுகோள்…

“நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறாகும். ஏனெனில், அது வரப்போகின்ற ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிப்பதாகவே அமைகின்றது.”

– இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் கரு ஜயசூரிய பதிவொன்றை இட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“ஏனைய நோய்களைப் போன்று கொரோனா வைரஸ் தொற்றிடமிருந்து எம்மால் விலகி ஓடமுடியாது. எனினும், நாட்டை மேலும் பலவீனப்படுத்தக் கூடியவாறான மற்றொரு முடக்கத்தைத் தவிர்ப்பதற்காக நாம் அனைவரும் தற்போதைய நிலைவரத்துடன் வாழ்வதற்குப் பழகிக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனிமைப்படுத்தல் உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் காணப்படும் விடயங்கள் உயர் முக்கியத்துவத்துடன் பின்பற்றப்பட வேண்டும். அவை பலவீனமானவர்களை அடக்குவதற்கோ அல்லது அவர்களது கருத்துக்களை முடக்குவதற்கோ பயன்படுத்தப்படாமல், அனைவருக்கும் பொதுவானதும் நியாயமானதுமான விதத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று தற்போது நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றார்கள். எனவே, அனைவரும் தாம் வைரஸ் தொற்றுக்குள்ளாவதைத் தடுப்பதற்கும் தம்மால் பிறருக்கு வைரஸ் தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கும் உரிய அனைத்து முற்பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தற்போதைய கொரோனா வைரஸ் பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்றோ அல்லது ‘பிரண்டிக்ஸ் கொத்தணி’ என்றோ இனியும் அழைப்பது தவறானது. அது ஆபத்தின் தன்மையைக் குறைத்துக் காண்பிக்கின்றது” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்