இரட்டைக் குடியுரிமை சரத்துக்கு எதிராக மஹிந்தவின் சகா வாசுவும் போர்க்கொடி…

“இரட்டைக் குடியுரிமை கொண்டவர்களை நாட்டின் ஆட்சிக் கட்டமைப்புக்குள் உள்வாங்கக் கூடாது. அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான குழுநிலை விவாதத்தில் இந்தச் சரத்தில் நீதி அமைச்சர் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு அமைச்சர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“காட்டு ஆட்சியிலிருந்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம். புதிய அரசமைப்பொன்றும் புதிய தேர்தல் முறையும் கட்டாயம் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை இந்தக் காட்டாட்சி சட்டங்களுடன் பயணிக்க முடியாது. ஜனாதிபதியும், பிரதமரும் எமது கட்சியைச் சேர்ந்தவர்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் எமக்குள்ளது. அதனால் அதிகாரம் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாது.

இரட்டைக் குடிரிமை இருப்பவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என 19ஆவது திருத்தச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக வரக்கூடும் என்பதை அறிந்துகொண்டு அதனைத் தடுப்பதற்காகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்ற சரத்தை உள்வாங்கினர்.

இரட்டைக் குடியுரிமைச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்குப் குழிபறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட போதிலும் அவர் அந்தக் குழியைத் தாண்டி வந்தார். ஆனால், நாம் உண்மையாகவே இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களை இந்த நாட்டின் ஆட்சியில் இணைத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள்.

வேறு காரணிகளுக்காக இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருந்தாலும் நாட்டின் சுயாதீனத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கு இடமளிக்கக் கூடாது. குழுநிலை விவாதத்தில் நீதி அமைச்சர் இந்தச் சரத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவார் என்று நம்புகின்றோம்.

முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் இல்லை. சில நாடுகளில் ஜனாதிபதி முறையும் சில நாடுகளில் பிரதமர் முறையும் உள்ளன. அதேபோன்று  பல்வேறு தேர்தல் முறைகளும் உள்ளன. புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் வரை நாட்டைக் கொண்டு செல்வதற்கான பின்புலத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காகவே 20ஆவது திருத்தச் சட்ட வரைவு கொண்டுவரப்பட்டுள்ளது” – என்றார்.

கோட்டா மறுப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் தொடர்பான சரத்தை நீக்க மறுத்துள்ளார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைக் குடியுரிமை சம்பந்தமான சரத்தைத் தவிர, அவசர சட்ட வரைவை  நிறைவேற்றுவது, கணக்காய்வு சட்ட வரைவு மற்றும் அமைச்சரவையின் எண்ணிக்கையை வரையறுக்கும் சரத்துக்களை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தானும் ஒரு காலத்தில் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்தவர் என்பதால், 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள அந்தச் சரத்தை நீக்குவதற்கு இணங்க முடியாது எனக் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்