மாகந்துற மதுஸ் கொல்லப்பட்டால் போதைப்பொருளை கட்டுப்படுத்தத் முடியுமா ? இதற்கு பின்னல்உள்ள சக்திகள் யார்…

இரு தரப்புக்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அகப்பட்டு போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துற மதுஸ் என்பவர் கொல்லப்பட்டதாக அவரது கதை முடிக்கப்பட்டுள்ளது என்பது நேற்றைய தலைப்பு செய்தியாகும்.

இவ்வாறான ஆபத்து நிறைந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்யப்படுவதானது மகிழ்ச்சி தரும் விடயமாகும்.

மதுஸ் கொல்லப்பட்டார் என்ற செய்தி வெளியானதும் இந்திய திரைப்பட புரட்சிக் கலைஞரும், தே.மு.தி.கழகத்தின் தலைவருமான விஜயகாந்தின் திரைப்படங்கள்தான் நினைவுக்கு வந்தது. அதாவது இந்திய பாணியில் கூறுவதென்றால் அவர் “என்கௌண்டரில் போட்டு தள்ளப்பட்டுள்ளார்” என்றுதான் கூற முடியும்.

இவ்வாறான கடத்தல்காரர்களுக்கு சட்டரீதியாக பகிரங்கமாக மரணதண்டனை வழங்க வேண்டும். அப்போதுதான் அது ஏனையவர்களுக்கு படிப்பினையாக அமையும் என்பது பொதுமக்களின் பிரார்த்தனையாகும்.

ஆனால் இவ்வாறானவர்கள் மட்டும் கொலை செய்யப்பட்டால் போதைப்பொருள் கடத்தல் வர்த்தகம் ஒழிந்துவிடுமா ?

கடந்த காலங்களிலும் இவ்வாறு ஏராளமான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் போதைப்பொருள் வியாபாரம் முன்பைவிட அதிகமாகவே நடைபெற்று வருகின்றது.

அவ்வாறென்றால் இவர்களுக்கு பின்னால் பலமான சக்தி உள்ளது. அவ்வாறான சக்திகள் இன்னும் கொல்லப்படவில்லை என்று ஊகிக்க முடிகின்றது. அவ்வாறான பலமான சக்திகள் யார் ?

எமது நாட்டைப் பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளை தவிர பலமான சக்திகள் யாரும் இருக்க முடியாது.

மனிதர்களில் மிகவும் ஆபத்தானவர்கள் அரசியல்வாதிகள் என்று பல கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறேன். வாக்குகளை பெறுவதற்காக மக்கள் மத்தியில் எவ்வளவுதான் நல்லவர்கள் போன்று வேசமிட்டாலும் அதனை அப்பாவி பொதுமக்கள் மட்டுமே நம்புவார்கள். உண்மை தெரிந்தவர்கள் நம்பமாட்டார்கள்.

எனவேதான் மாகந்துற மதுஸ் போன்றவர்கள் கொலை செய்யப்படுவதனால் மட்டும் போதைப்பொருள் வர்த்தகத்தை தடுத்து நிறுத்த முடியாது. இவ்வாறானவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுகின்ற பலமான சக்திகளான அரசியல்வாதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதன்மூலம் மட்டுமே இதனை கட்டுப்படுத்த முடியும்.

மாகந்துற மதுசுக்கு பின்னால் யார் யார் மறைந்திருக்கின்றார்கள் என்ற பட்டியலை அறிந்துகொள்ள முன்பே அவர் கொல்லப்பட்டதன் மூலம் உண்மையான போதைப்பொருள் மொத்த வியாபாரிகள் தப்பித்துக்கொண்டார்கள். எனவே இன்னும் வேறு மதுஸ்கள் மூலமாக இந்த வர்த்தகம் தொடர்ந்துகொண்டே செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முகம்மத் இக்பால்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்