’20’ இன்று நிறைவேறுவது உறுதி…

அடுத்த வருடம் புதிய அரசமைப்பு உருவாக்கப்படும் என்றும், அதன்போது இரட்டைக் குடியுரிமையைக் கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், அரச துறையில் நிறைவேற்றுப் பதவிகளை வகிப்பதற்கும் தடை விதிக்கப்படும் ஏற்பாடு நிச்சயம் உள்ளடக்கப்படும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு நேற்றிரவு உறுதியளித்துள்ளார். இதையடுத்து 20ஆவது திருத்தச் சட்ட வரைவை முழுமையாக ஆதரிக்கும் தீர்மானத்தை ‘மொட்டு’வின் பங்காளிக் கட்சிகள் எடுத்துள்ளன.

அதற்கமைய நாடாளுமன்றத்தில் இன்றிரவு நடைபெறவுள்ள 20ஆவது திருத்தச் சட்ட வரைவு மீதான வாக்கெடுப்பில் அரசின் பங்காளிக் கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர்.

இந்தத் தகவலை ஊடகங்களிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச, புதிய ஹெல உறுமயவின் தலைவரான அமைச்சர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண எம்.பி. ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு ஆதரவளிக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், புத்தளம் மாவட்ட எம்.பி. மொஹமட் அலிசப்ரி, மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. நஸீர் அஹமட், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹரீஸ், அதே மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பிக்களான பைசால் காசிம், மொஹமட் முஷாரப் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் எம்.பி. டயானா கமகே ஆகியோரே இவ்வாறு ஆதரவாக வாக்களிக்கவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இதனிடையே 20ஆவது திருத்த சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், அவரின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கவுள்ளது. மைத்திரி வாக்கெடுப்பில் பங்கேற்கமாட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்