மட்டக்களப்பு-கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்களின் காணி விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் நடவடிக்கை

கரடியனாறு கரடியன்குளம் பிரதேச மக்கள் காலாகாலமாக விவசாயம் மற்றும் குடியிருப்புகளை மேற்கொண்டு வந்த காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் மக்களின் வேண்டுகொளை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேசத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலாகாலமாக அப்பிரதேசத்தில் விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம், சுவர்ணபூமி திட்டத்தினால் வழங்கப்பட்ட பத்திரங்கள் என்பன இருக்கத்தக்க, கரடியனாறு விவசாயப் பண்ணையின் அதிகாரிகளால் அக்காணிகள் விவசாயப் பண்ணைக்குரியது என்ற வகையில் நேற்றைய தினம் அளவீடுகளை மேற்கொள்ள முயற்சித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் அவ்விடத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களுடன் ஆலோசித்து, உரிய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்களுடனான கலந்துரையாடலின் பின்னர் மக்களோடு இணைந்தவாறான முடிவுகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்தமைக்கமைவாக அளவீட்டு நடவடிக்கைகள் உடன் இடைநிறுத்தப்பட்டன.

இது தொடர்பில் ஓரிரு நாட்களில் அப்பிரதேச மக்களுடன் பிரதேச செயலாளர் உட்பட விவசாயப் பண்ணை அதிகாரிகள் சகிதம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.