பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களால் கல்முனை பிராந்தியத்தில் 12பேருக்கு வைரஸ் தொற்று…

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 12பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுளளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த கருத்தினை முன்வைத்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பேலியகொட மீன் சந்தைக்கு சென்று வந்தவர்களில் தனிமைப்படுத்தி வைத்தவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எமது கல்முனை பிராந்தியத்தை பொறுத்தவரை நகர முடக்கம் அல்லது ஊரடங்கு அமுல்ப்படுத்தவோ அவசியம் இதுவரை எழவில்லை ஏனெனில் நூற்றுக்கணக்கான பொது மக்களிடம் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளோம். எந்தவித பரிசோதனை முடிவுகளும் பொசிடிவ் ஆக வரவில்லை.

சாய்ந்தமருது பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட நபர் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளார். இது எதிர்காலத்தில் பாரிய தாக்கத்தினை கண்முன்னே கொண்டு வருகின்றது.

இதனை பொதுமக்கள் உணர்ந்து பாதுகாப்பு தரப்பினர், சுகாதார துறையினர், அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றி செயற்பட வேண்டும். இதனை இங்கு தவறுவதாகவே உணர்கிறேன். சுகாதார வழிமுறைகளை பின்பற்ற தவறும் பட்சத்தில் சமூகம் பாரிய விலை கொடுக்க நேரிடும் என்பதனை அழுத்தம் திருத்தமாக கூறிக்கொள்கிறேன்.

கொரோனா நோய் தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டத்தில் இருந்து வருகின்றவர்களும், எமது மாவட்டத்தில் இருந்து நோய் தாக்கம் அதிகரித்துள்ள மாவட்டத்திற்கு செல்கின்றவர்களும் கூடியளவு போக்குவரத்தினை குறைத்துக்கொள்ள வேண்டும்.

வெளி மாவட்டங்களுக்கு சென்று வந்தால் உடனடியாக 0777258376 எனும் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ , வட்சப்  ஊடாகவோ  எமது பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இயங்கும் கொரோனா பரிசோதனை மையத்திற்கு தகவல்களை வழங்குவதன் மூலமாக எமது பிரதேசத்தை பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.