வவுனியா கல்மடு பொது நோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு எனத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்மடு பொதுநோக்கு மண்டப புனரமைப்பில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து அக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த ஒரு தொகுதி மக்கள் ஈர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்மடு பாடசாலைக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி இன்று (30.10) இடம்பெற்றது.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில், கல்மடு கிராம அலுவலர் பிரிவில் கல்மடு, சாளம்பன், பூம்புகார், முல்லைக்குளம், ஈஸ்வரிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இக் கிராம அலுவலர் பிரிவுக்கு என பிரதேச செயலகத்தால் ஒதுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் பணத்தில் இக் கிராம அலுவலர் பிரிவுக்கான பொதுவான கட்டடமாகவுள்ள பொது நோக்கு மண்டபத்தை புனரமைக்க ஐந்து கிராம மக்களும் இணங்கினர். இதற்கமைவாக கல்மடு மாதர் அபிவிருத்திச் சங்கம் அதற்கான கட்டட புனரமைப்பு ஒப்பந்தத்தைப் பெற்று  அதனை  வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரான மங்களராஜா என்பவருக்கு வழங்கியிருந்தனர்.

கட்டட புனரமைப்பின் போது பொது நோக்கு மண்டபத்தில் இருந்து ஓடுகள் கழற்றப்பட்டு தற்போது சீற் போடப்படுகின்றது. இதன்போது அதற்கு பயன்படுத்தும் மரங்கள் இக்கட்டடத்தில் இருந்த 15 வருட பழமையான மரங்கள். புதிய மரங்கள் முழுமையாக மாற்றப்படவில்லை. இதனால் சில காலங்களில் கூரை உடைந்து விழும் அபாயமுள்ளது. இதனால் தமது மண்டபத்தை சரியான அளவில் மரங்களைப் போட்டு புனரமைத்து துரமாறும் அதற்கு ஒதுக்கிய பணத்தை சரியாக பயன்படுத்துமாறும் கோரிய ஆர்ப்பட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்களுக்கு தெரியப்படுத்திய போதும் அவர் காத்திரமான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அம் மக்கள் குற்றம் சாட்டினர்.

ஆர்ப்பட்டம் நடைபெற்ற போது, அங்கு சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கு.திலீபன், குறித்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடியதுடன், பொது நோக்கு மண்டபத்தையும் பார்வையிட்டார். அத்துடன் ஒப்பந்தத்தைப் பெற்ற மாதர் சங்கத்தினருடனும் கலந்துரையாடினார். இதனையடுத்து குறிதத விடயம் தொடர்பில் வவுனியா பிரதேச செயலாளருடன் தொலைபேசியில் கலந்துரையாடியிருந்தார். இதன்போது குறித்த வேலை தொடர்பில் கட்டடங்கள் திணைக்களம் மற்றும் மாவட்ட செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆகியோரின் மதிப்பீட்டிற்கு பணித்துடன், அது வரை நடைபெறும் வேலைகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, குறித்த கட்டட புனரமைப்பு நடவடிக்கைகள் சரியென ஒப்பந்தத்தை பெற்று பிரதேச சபை உறுப்பினரிடம் வழங்கிய மாதர் சங்கத்தினர் தெரிவித்திருந்தமையுடம் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.