இஸ்லாமிய மக்களின் உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது – இராதாகிருஷ்ணன் எம்.பி.

பஸில் ராஜபக்ச பாராளுமன்றம் வருவதை நான் ஆட்சேபிக்கவில்லை. சிறப்பாக சேவையாற்றக்கூடிய அவர் சபைக்கு வந்தால் அனைவருக்கும் சேவைகளை வழங்குவார் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இன்று (4) நுவரெலியாவில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றம் வருவதற்கான தடை 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நீக்கப்பட்டுள்ளது. பஸிலுக்காகவே இந்த சரத்து உள்வாங்கப்பட்டது. பஸில் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசியப்பட்டியலிலும் இடம்பெறவில்லை. எனவே, அவர் பாராளுமன்றம் வருவதற்கு சட்டரீதியாக பிரச்சினை உள்ளது என அறியமுடிகின்றது. அதனை நிவர்த்தி செய்துகொண்டு அவர் வரலாம். அவ்வாறு வந்தால் அதற்கு நாம் ஆட்சேபனை வெளியிடப்போவதில்லை.

இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் உயிரிழந்தால் அவர்களின் சடலம் அடக்கம் செய்யப்படவேண்டும். ஆனால் அந்த உரிமை இங்கு தடுக்கப்பட்டுள்ளது.  கொரோனாவை காரணம்காட்டி முன்னெடுக்கப்படும் இந்நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளமுடியாது.  இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றியிருந்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் அழுத்தம் தொடரும்.

மேற்படி முடிவை மீள்பரிசீலனை செய்ய குழு அமைக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். எது எப்படியிருந்தாலும் மத உரிமை பாதுகாக்கப்படவேண்டும்.

மலையகத்தில் பல்கலைக்கழக வளாகமொன்று அமைக்கப்படவேண்டும் என்பதில் நாம் தீவிரமாக இருந்தோம். இதற்காக தலவாக்கலை, ஹொலிரூட் தோட்டத்தில் 10 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் ரொசான் ராஜதுரையிடம் கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம். ஜப்பான் அரசின் உதவியும் பெறப்படவிருந்தது. எனினும், 52 நாட்கள் அரசியல் குழப்பத்தால் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இன்று பல்கலைக்கழகத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு ஒத்துழைப்பையும் நாம் வழங்குவோம்.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 14 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அக்காலக்கெடு முடிவடைவதற்கு நாட்கள் உள்ளன. எனவே, அவர் வழங்கும் பதிலின் அடிப்படையிலேயே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதுவரை அவர் கட்சி செயற்பாடுகளில் பங்கேற்கமுடியாது.

கொட்டகலையில் இராணுவ முகாம் அமைக்கப்படுகின்றது என தேர்தல் காலத்தில் அறிவித்திருந்தோம். அன்று மறுப்பு தெரிவிக்கப்படுகின்றது. இன்று இராணுவ முகாமாக காட்சியளிக்கின்றது. எனவே, தற்போது அரசியல் இருப்பவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.