பஸ் கட்டணம் ஒருபோதும் அதிகரிக்கப்பட மாட்டாது! – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உறுதி

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது எனப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க ஒருபோதும் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க அந்தச் சங்கத்தினருடன் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம். அதற்கிணங்க எதிர்வரும் வாரம் இக்காலத்துக்குப் பொருத்தமான போக்குவரத்து கொள்கை ஒன்று தயாரிக்கப்படும்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளுக்கிணங்க கொரோனா வைரஸ் தொற்று செயற்பாட்டுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படும்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பஸ் உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் ஆகிய இரு தரப்பினரையும் கவனத்தில்கொண்டு இரு தரப்பினருக்கும் அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அவசியம்” – என்றார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தெரிவிக்கையில்,

“நாட்டில் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையில் தனியார் பஸ் போக்குவரத்துச் சேவை பெரும் நட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. தற்போது 12 ரூபாவாக உள்ள ஆகக் குறைந்த கட்டணத்தை 20 ரூபாவாக அதிகரிக்கவும், அத்துடன் பஸ் கட்டணத்தில் 50 வீத அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசிடம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.