மூன்று மாவட்டங்களின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை- அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னியின் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வவுனியா அரச அதிபர் சமன்பந்துல சேன தலைமையில் வவுனியா மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (07) இடம்பெற்றது.

 

இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள வீட்டுதிட்ட பிரச்சனைகள், வீதி அபிவிருத்தி, குளப் புனரமைப்பு, கால்வாய் கட்டுமானம், காணி உறுதிப்பத்திரம் வழங்கல், சோளர் மூலம் மின்சாரம் பெறல், கிராமிய உட்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், அவை தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.

குறிப்பாக உடனடியாக 22,000 வீடுகள் வீடற்ற பொருத்தமான பயனாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் வனவளத் திணைக்களத்தின் கீழ் உள்ள 84 குளங்களையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2500 காணி உறுதிப் பத்திரங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளது. கிராமிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் வீதிகள், பாலங்கள், மதகுகள் என்பவற்றை புனரமைக்கும் நடவடிக்கைகள் துரித கதியில் மூன்று கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மகாவலி எல் வலயத்தின் கீழான சேருவாவி புனரமைப்பு, எல் வலய அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த அமைச்சர் சமல்ராஜபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய பின் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோ, வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ், வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, கிராமிய வீதிகள் மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் நிமல் லங்சா, மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்கள், அகழிகள் மற்றும் குடியிருப்பு, பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்பல, கிராமிய மற்றும் பிரதேச நீர் கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர் கு.திலீபன், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் கே.கே.மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், வன்னி பிரதேசத்தை உள்ளடக்கிய அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், நகரசபை மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.