மக்களைச் சாகடிக்காதீர்கள்; நாட்டை உடன் முடக்குங்கள்!

மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசு, கொரோனா என்ற கொடிய தொற்று நோய்க்குள் அவர்களைச் சாகடிப்பது மாபெரும் குற்றமாகும். முழு நாட்டையும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்கி கொரோனாத் தொற்றுப் பரவலுக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.”

– இவ்வாறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. ஆகியோர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாம் அலை கடும் வீரியத்துடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

நாடெங்கும் கொரோனா கொத்தணிகள் வியாபித்து அவை சமூகத் தொற்றாகி வீடுகளுக்குள் புகுந்துள்ளன.

நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலைக்குள் மாத்திரம் சிக்கி இதுவரை 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கொரோனாவின் முதலாம், இரண்டாம், மூன்று அலைகளுக்குள் சிக்கி மொத்தமாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நாடெங்கும் தற்போதும் மூன்றாவது அலை உச்சக்கட்டமாகப் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்த அலையில்தான் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இது தொடர்பில் அரசு அசமந்தப்போக்கில் செயற்படுகின்றது. மேல் மாகாணத்தை மட்டும் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை முடக்கி வைத்துள்ளது. 9ஆம் திகதிக்குப் பின்னர் மேல் மாகாணத்தையோ அல்லது முழு நாட்டையோ முடக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஜனாதிபதியும், இராணுவத் தளபதியும் அறிவித்துள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிவாரணப் பொருட்களை வழங்குவது அரசின் கடமை. அதேவேளை, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதும் அரசின் கடமை.

கொரோனாத் தொற்று உயிர்ப்பலியை எடுத்து வருகின்ற இந்த நிலையிலும் முழு நாட்டையும் முடக்காமல் அரசு திறந்து வைத்திருக்கின்றது. எனவே, கொரோனாவுக்குள் மக்களைச் சாகடிக்காமல் முழு நாட்டையும் குறைந்தது இரு வாரங்களுக்காவது முடக்கி தொற்றுப் பரவலுக்குள் அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மக்களின் ஆணையுடன் ஆட்சிக்கு வந்த அரசு, கொரோனா என்ற கொடிய தொற்று நோய்க்குள் அவர்களைச் சாகடிப்பது மாபெரும் குற்றமாகும். இதை உணர்ந்து அரசு செயற்பட வேண்டும்” – என்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.