வெள்ளத்தில் மிதக்கும் வீடு: பார்க்க நேரமில்லை என்கிறார் வவுனியா பிரதேச செயலாளர்…

வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் வீடு ஒன்றினுல் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் சிறுவர்களுடன் அவதிப்படும் குடும்பம் ஒன்று வவுனியா பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்திய போது அதனை பார்வையிட நேரமில்லை எனக் கூறி சென்று விட்டதாக அக் குடும்பம் கவலை வெளியிட்டுள்ளது.

வவுனியா, உக்கிளாங்குளம், பாண்டியன் வீதி திருத்த பணியின் சீரற்ற தன்மை காரணமாக அப்பகுதியில்  மூன்று சிறுவர்களுடன் வசிக்கும் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வீட்டு வளவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களினால்  ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிற்கும் இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் வழங்கப்பட்ட சப்பிரிகம வேலைத்திட்டத்திற்கான நிதியினை பெற்று பண்டாரிக்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட உக்கிளாங்குளம், பாண்டியன் வீதி புனரமைக்கப்பட்டிருந்தது. புனரமைக்கும் போதே அவ் வீதியை சேர்ந்த ஒரு பகுதி மக்கள் குறித்த திருத்தப் பணி தொடர்பில் தவறு உள்ளதாகவும், இதனால் வெள்ள நீர் வழிந்தோட வாய்ப்பு இல்லை எனவும் தெரிவித்திருந்தனர். இருப்பினும் அம் மக்களின் கருத்துக்களை புறந்தள்ளி குறித்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கை குறித்த ஒரு பகுதி மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் வவுனியாவில் பெய்த கடும் மழையினால் குறித்த வீதி திருத்தப் பணி காரணமா ஒருவரது வீட்டுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், வீட்டு வளவுப் பகுதியிலும் வெள்ளம் காணப்படுகின்றது. கிணற்றுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில் மூன்று குழந்தைகளுடன் வாழும் குறித்த குடும்பம் தமது அவல நிலை தொடர்பில் வவுனியா தெற்கு பிரதேச சபை செயலாளர் திருமதி சுகந்தி கிசோர் அவர்களுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர் வருகை தந்து பார்வையிட்டதுடன், குறித்த வீதியில் காணப்படும் மதகினை அகற்றி சீர் செய்வதாக தெரிவித்தார்.

அத்துடன், வவுனியா பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்கள் குறித்த பகுதிக்கு அண்மித்த இடத்திற்கு வருகை தந்த போது வீட்டின் அவல நிலை தொடர்பில் குறித்த குடும்பத்தினர் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்கள். இதன்போது வந்து பார்வையிட நேரமில்லை. வியாழக்கிழமை வருகிறேன் எனக் கூறி விட்டு சென்று விட்டார்.  மழை தொடர்ந்தால் குறித்த குடும்பம் வீட்டை விட்டு இடம்பெயர வேண்டிய நிலையில் உள்ளது.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் திட்டமிடாத வகையில் மேற்கொள்ளும் அபிவிருத்திகளும் பொறுப்பற்ற தன்மைகளும் இக் கடும்பத்தின் அவலநிலைக்கு காரணம். இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வைப் பெற்றுத் தருமாறு அக் குடும்பம் கோரியுள்ளது.   


 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.