கவிஞர்களுக்கான களத்தை அர்த்தம் உள்ள வகையிலே விபுலர் பிறந்த காரைதீவு மண்ணில் உருவாக்கி தருவேன்-ஜெயசிறில்

பொதுவாக தமிழன் என்கிற வகையிலும் விசேடமாக முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் பிறந்த காரைதீவு மண்ணின் தலைவன் என்கிற வகையிலும் மொழி, கலை, கலாசாரம், இலக்கியம் பண்பாடு, ஒழுக்க விழுமியம், நாகரிகம் ஆகியவற்றை கட்டி எழுப்புவதற்கும், பேணி பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில் பெருமையும், பெருமிதமும் அடைந்தவராக உள்ளார் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

மூத்த ஊடகவியலாளர் விபுலமணி இளையதம்பி கோபாலசிங்கத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறிலின் பேராதரவில் கவிஞர்களான வைத்திய கலாநிதி கவி முரசு எம். சி. எம். காலித், கவி வித்தகர் காரையன் கதன், ஊடகவியலாளர் த. தர்மேந்திரா ஆகியோரின் பங்கேற்புடன் தீபாவளி தினத்தில் காரைதீவில் இருந்து சிறப்பு கவியரங்கம் இடம்பெற்று முகநூல் வழியாக நேரலையாக ஒளிபரப்பு பட்டது.
இதை ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோது தவிசாளர் ஜெயசிறில் மேலும் தெரிவித்தவை வருமாறு
விபுலமணி கோபாலசிங்கம் காரைதீவில் பல புதுமைகளையும் உருவாக்கி கொண்டு நடத்தியவர். குறிப்பாக குறும்பட துறையில் தடம் பதித்தவர். இவரை வழி காட்டியாக கொண்டு புதிய படைப்பு முயற்சிகள் காரைதீவு மண்ணில் இருந்து உருவாகின. எனவே இவரை ஒரு பீஷ்மர் என்று கூறலாம்.
தற்போதைய கொரோனா தொற்று அச்ச சூழலில் உலகம் தழுவிய தமிழ் இந்துக்கள் அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்க நேர்ந்து உள்ளது. கோவில்கள், உறவினர்களின் இல்லங்கள் போன்றவற்றுக்குகூட செல்ல முடியாமல் ஆகி விட்டது. கலை நிகழ்வுகள் போன்றவை களை இழந்து போயின.
நான் அறிந்த வரையில் தீபாவளி பண்டிகை போன்றவற்றை ஒட்டி தமிழ்நாட்டில் பிரமாண்டமான கவியரங்கங்கள் இடம்பெறுவது வழக்கம். இந்த வழக்கத்தை கால ஓட்டத்தில் ஈழ திருநாடும் ஓரளவுக்கு உள்வாங்கி கொண்டது. ஆயினும் காரைதீவு மண்ணில் இருந்து இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்படுவது எனது தவிசாளர் பதவி காலத்தில் இதுவே முதல் தடவை ஆகும்.
அதிலும் குறிப்பாக எமது மண்ணில் இருந்து காலத்தின் கோலத்தை அனுசரித்து முகநூல் மூலம் சிறப்பு கவியரங்கம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகும். கவிதை தலைப்பும் மிக மிக பொருத்தமானது. அதே நேரத்தில் இன நல்லிணக்கத்தின் அடையாளமாக கவி முரசு வைத்திய கலாநிதி காலித் இதில் பங்கேற்பது இக்கவியரங்கத்துக்கு மகுடம் சேர்த்து இருக்கின்றது. ஏற்பாட்டாளரையும், கவிஞர்களையும் மனதார பாராட்டுகின்றேன்.
அரங்க கவிஞர்களின் உள்ள கிடக்கைகளை நிறைவேற்றி கொடுப்பதற்கு தவிசாளர் என்கிற வகையில் பூரண உதவி, ஒத்தாசை ஆகியவற்றை நான் தொடர்ந்தும் வழங்குவேன். ஒவ்வொரு மாதமும் முழுமதி நாளில் கவியரங்கங்கள் காரைதீவில் நடத்தப்பட வேண்டும். தமிழர் பெருநாளாகிய தைத்திருநாளில் பிரமாண்டமான கவியரங்கை எதிர்பார்க்கின்றேன்.
கலைஞர்கள், கவிஞர்கள் போன்றவர்களுக்கு மகத்தான அங்கீகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும். அதற்கான களத்தை காரைதீவு மண்ணில் இருந்து அர்த்தம் உள்ள வகையில் உருவாக்க வேண்டும் என்பது எனது கனவு ஆகும். கலைகள் சிறக்கட்டும். கவிதைகள் பிறக்கட்டும். சமுதாயம் செழிக்கட்டும். காரைதீவு மண்ணின் பெருமை எட்டுத் திசைகளிலும் உயர பறக்கட்டும் என்றார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.