அழித்த மரங்களை நட ரிஷாத் ரூ.50 கோடி செலுத்தவேண்டும்! – வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் தகவல்…

அழிக்கப்பட்டுள்ள வில்பத்து தேசிய சரணாலயத்தை அண்மித்த வனப் பகுதியில் மீள மரங்களை நடுவதற்காக ஒரு ஏக்கருக்கு 2 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட தெரிவித்துள்ளார்.

சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தை அண்மித்த பகுதியில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பு அழிக்கப்பட்டுள்ளது எனக் கணிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

குறித்த பகுதியில் மரங்களை மீள நடுவதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், இரண்டு மாதங்களுக்குள் செலவிடப்படும் தொகையை வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த நிதித் தொகை ரிஷாட் பதியுதீனின் தனிப்பட்ட நிதியிலிருந்து செலவிட வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வில்பத்து சரணாலயத்தில் மரங்களை மீள நடுவதற்காக கணிப்பிடப்பட்ட அறிக்கை, ரிஷாத் பதியு தீனுக்கும், நீதிமன்றத்துக்கும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நிலத்தைப் பதப்படுத்தி, மரக்கன்றுகளை நட்டு, குறைந்தது ஐந்து வருடங்களாவது அந்த வனப் பகுதியைப் பராமரிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், 2 ஆயிரத்து 500 ஏக்கருக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை பராமரிப்பதற்காகச் சுமார் 50 கோடி ரூபா நிதியை, ரிஷாத் பதியுதீன் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்புக்கு நடுவதற்கான மரக்கன்றுகள் தம்மிடம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிதாக மரக்கன்றுகளை வளர்ப்பதற்காகத் தவரணை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.ஏ.சி.வேறகொட மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.