அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் – இராதாகிருஷ்ணன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைக்கவேண்டும் என்பதே அமரர். ஆறுமுகன் தொண்டமானின் கோரிக்கையாகவும் இருந்தது. எனவே, அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையிலானது அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுக்க ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

 

அட்டனில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

3 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் நாளை திறக்கப்படவுள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

 

” மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத்தவிர ஏனைய பகுதிகளில் தரம் 6 முதல் 13வரையான மாணவர்களுக்கு கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆனால் இந்த முடிவை பிற்போடுமாறு மக்கள் கோருகின்றனர்.

 

பாராளுமன்ற அமர்வு முடிவடைந்தபின்னர் நான் நேற்று நுவரெலியா வந்தேன். எமது மக்களும் அதே கோரிக்கையை முன்வைக்கின்றன. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் பாடசாலைகளை திறப்பதற்கான சுகாதார பாதுகாப்பு தற்போதைய சூழ்நிலையில் இல்லை என்றும்இ தொற்றுநீக்கம் செய்யும் நடவடிக்கைகூட இடம்பெறவில்லை எனவும் குறிப்பிடுகின்றனர்.

 

அத்துடன் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியாத சூழ்நிலையும் இருக்கின்றது. ஒரு மண்டபத்தில் நான்குஇ ஐந்து வகுப்புகள் உள்ளன. இதில் எவ்வாறு சமூகஇடைவெளியை பின்பற்றுவது? எனவேஇபாடசாலைகளை திறக்கும் முடிவை சற்று ஒத்திவைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.” – என்று தெரிவித்தார்.

 

5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வே. இராதாகிருஷ்ணன் எம்.பி., கூறியதாவது” தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு உரியவகையில் கொடுப்பனவு வழங்கப்படவில்லை. அரச அதிபருக்கு இதுபற்றி அறிவித்துள்ளோம். மக்கள் பட்டினியுடன் வாழ்கின்றனர். பொறுமையிழந்து கொழும்பு மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலை ஏற்பட்டது. மக்கள் சார்பில் மனோ கணேசன் கருத்து வெளியிடும்போது, அவரை விமல்வீரவன்ஸ முட்டாள் என விமர்சிக்கின்றார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகள் உரிய வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றார்.

 

 ஆயிரம் ரூபா தொடர்பில் கருத்து வெளியிட்ட  அவர்,

” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும். எல்லாவற்றையும் சேர்த்து ஆயிரம் வழங்கும் திட்டம் அவசியமில்லை. அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் என்றே அமரர். ஆறுமுகன் தொண்டமானும் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் முகமாகவேனும் அரசாங்கம் அதனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

 

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் கம்பனிகள் இதனை செய்யுமா என்பது கேள்விக்குறியே. எனவே, சம்பளம் கைக்கு கிடைக்கும்வரை நம்பமுடியாது. அதேபோல 2021 பட்ஜட்டில் மக்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் சலுகைகள் இல்லை.” என்று சுட்டிக்காட்டினார்.

 

நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு,

” பொதுவெளியில் ஒன்றுகூடி நினைவேந்தல் நடத்துவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. எனினும், தனிநபர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உயிரிழந்த உறவுகளை நினைவுகூரலாம். ஆனால், நீதிமன்ற தீர்ப்பையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்டத்தையோ சவாலுக்கு உட்படுத்தும் விதத்தில் செயற்படக்கூடாது.” – என்று பதிலளித்தார் இராதாகிருஷ்ணன் எம்.பி.(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.