மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மத்தியில் ஊடகப் பணியில் செயற்பட்டுவரும் ஊடகவியலாளர்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே. கருணாகரன் தலைமையில்

நேற்று   (23) மாவட்ட செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.
மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சிணி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் ஹியூமெடிகா சர்வதேச தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊடகவியலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட கொரோனா தடுப்பு மையத்தில் செயற்படும் உத்தியோகத்தர்களுக்கான கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
ஹியூமெடிகா சர்வதேச தொண்டு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டாக்கடர் டி.ஜி. பிருதிவிராஜ் இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் ஊடகவியலாளர்கள் உன்மையான தகவல்களை தெளிவாக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தவேண்டும். கடந்த காலங்களில் சில ஊடகங்கள் உன்மைக்குப் புறம்பான பொய்யான தகவல்களை வெளயிடுவதனால் பொதுமக்களும், நோயாளர்களும் பீதியடைகின்றனர். ஒவ்வொருவரும் தன்னையும் பாதுகாத்து மற்றவர்களையும் பாதுகாக்க வேண்டுமென செயற்படவேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும் அரசாங்க அதிபர் கருணாகரன் கருத்து தெரிவிக்கையில் ஊடகவியலாளர்களின் பங்கு மிகக் காத்திரமானது. ஊடகவியலாளர்கள் ஊடகங்கள் வாயிலாக உன்மையான தகவல்களை தெளிவாக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தக் காத்திரமான பொறுப்பு ஊடகவியலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. போட்டித் தன்மையில் தவறுதலான செய்திகளைப் பரப்புவது சிக்கல்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதுடன் இது நமக்கும் நாட்டிற்கும் பின்னடைவை ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவனபவான், மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் மற்றும் ஊடகவியலாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.