பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியுமெனில் அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது? சபையில் சார்ள்ஸ் எம்.பி. கேள்வி

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பிள்ளையானுக்கு பிணை வழங்க முடியும் என்றால் எந்தவித சாட்சியும் இல்லாது வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 ஆண்டுகளாகச் சிறையில் தடுத்து வைக்கப்பட்ட எமது தமிழ் இளைஞர்களை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது?”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சபையில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் கூறுகையில்,

“சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை அரச தரப்பினர் முன்வைக்கின்றனர்.

இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்குப் பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தவர்களுக்குப் பிணை வழங்க முடியாது என அரச தரப்பினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா? இது வெறுமனே அரசின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.