புரெவி புயலின் தாக்கத்தின் எதிர்வுகூறலின் அடிப்படையில் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தகவல்.

புரெவி புயலின் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.அந்த வகையில் நிலவுகின்ற காலநிலையின் நிலவரம் தொடர்பில் இலங்கை தேசிய அனர்த்த முகாமைத்துவ பிரிவினாலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்ற புரவி என்கின்ற சூறாவளியின் தாக்கம் வடபகுதியினையும் தாக்ககூடிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இன்றைய தினம் அதிகாலையிலிருந்து அதிகளவிலான மழை வீழ்ச்சி மாவட்டத்திற்கு கிடைத்துள்ளது.

 

அதன் காரணமாக பல இடங்களில் மழைவெள்ளம் தேங்கியுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.ஓரிரு இடங்களில் மரங்கள் முறிவடைந்துள்ள நிலைமையும் பலத்த காற்றின் காரணமாக வீட்டின் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினையும் அவதானித்துள்ளதாகவும் பாதிப்பு நிலமைகளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேரடியாக அவதானித்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

 

மேலும் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பில் பருவபெயர்ச்சி காலநிலையினை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் ஏற்கனவே மாவட்ட மட்டத்தில் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாவட்ட அரசாங்க அதிபர் புரெவி சூறாவளித்தாக்கத்தின் எதிர்வு கூறலின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்பினரை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.குறிப்பாக மின்சார சபை இலங்கை மரக்கூட்டுத்தாபனம் வீதி அதிகாரசபை இலங்கை தொலைத்தொடர்பு நிலையம் பிரதேச செயலாளர்கள் கிராம அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடமையாற்ற தயார்நிலையில் உள்ளார்கள்.இவற்றோடு வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்ற போது மக்கள் இடம்பெயரவேண்டிய தேவை ஏற்படுமிடத்து அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுவார்கள் எனினும் தற்போதைய கொவிட்-19 தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டிய தேவையுள்ளதனால் வெள்ள அனர்த்தம் ஏற்படுகின்ற போது பொதுமக்கள் இயலுமான வரையில் தங்களது நண்பர்கள் உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்கான சூழ்நிலை காணப்படுமாயின் அவ்வாறான இடங்களில் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் அதேவேளை அவ்வாறான நிலைமை காணப்படாத நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய வகையில் பொது இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்தார். மேலும் அனர்த்தம் தொடர்பில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தேவை ஏற்படமிடத்து கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தொலைபேசி இலக்கமான 0212285330 என்ற இலக்கத்தினை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.