புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிப்பு

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட புரெவி சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 794 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 455 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் ஒரு வீடு முழுமையாகவும் 40 வீடுகள் பகுதி அளவிலும் சேதம் அடைந்துள்ளதுடன், 3 சிறிய மற்றும் மத்திய முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 183 குடும்பங்களைச் சேர்ந்த 605 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 3 சிறிய மற்றும் மத்திய முயற்சியாளர்கள் குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவில் 212 குடும்பங்களைச் சேர்ந்த 562 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 237 குடும்பங்களைச் சேர்ந்த 805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 357 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெலிஓயா பிரதேச செயலாளர் பிரிவில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 04 வீடுகள் பகுதியளவில் சேதம் அடைந்துள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடொன்று முழுமையாக சேதமடைந்துள்ளதுடன்,  ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் சேத விபரங்கள் மதிப்பிடப்பட்டு நிதி விடுவிப்புக்காக அமைச்சுக்கு அறிக்கையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.