வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான விவாதத்தின் போது பிரதமர் ஆற்றிய முழுமையான உரை

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 2020 என்பது ஒரு கணிக்க முடியாத பல சவால்களை பொறுப்பேற்க வேண்டிய ஒரு ஆண்டு என்பதை இந்த சபை அறிந்திருக்கிறது. உலகம் முழுவதும் இது போன்ற ஒரு பாதிப்பை எதிர்கொள்ளும் என்று 2019 ஆம் ஆண்டில் நாம் எவரும் நினைத்திருக்கவில்லை. ஆனால் நாங்கள் அந்த சவாலை ஏற்றுக்கொண்டோம். எங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையை இழக்க நாம் அனுமதிக்கவில்லை.

அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் நிவாரணங்களை அதிகப்படுத்தி கொவிட்-19 முதலாவது அலையை கட்டுப்படுத்தினோம். அடுத்தபடியாக கொவிட்-19 இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்கு பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தனிமைப்படுத்தப்படும் குடும்பமொன்றுக்கு இரு வாரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உணவு பொதியை பெற்றுக்கொடுக்கவும், இரு வாரங்களைவிட அதிகமாகும் சந்தர்ப்பத்தில் அதனை மேலும் நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக லொக்டவுன் காரணமாக வாழ்வாதாரம் இழக்கப்படும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி கொடுப்பனவை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

நாம் முகங்கொடுத்துள்ள நிலைமையை புரிந்துக்கொள்ள நான் ஒரு உதாரணம் கூறுகின்றேன். இந்த வரவு செலவுத் திட்டத்தை நாம் முன்வைக்கும் போது 70 பில்லியன் ரூபாயை கொரோனா தொற்றுக்கென செலவிட்டிருந்தோம். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு இடம்பெறும் இன்றைய நாளவில் நாம் 82 பில்லியன் ரூபாயை கொவிட் ஒழிப்பிற்காக செலவிட்டுள்ளோம். டிசம்பராகும் போது அது 90 பில்லியனை விட அதிகமாகும். அதனால் இது போன்ற பாரிய சவால்களை ஏற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டமாக இதனை குறிப்பிட வேண்டும்.

நாம் உலகத்துடன் எந்தளவிற்கு பிணைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர சரியான தருணம் தான் இது. உலகில் இடம்பெறும் விடயங்கள் அரசியல், பொருளாதாரம், சுகாதார அடிப்படையில் இடம்பெறும் விடயங்கள் எம்மை எந்தளவு பாதிக்கும் என்பதை புரிந்துக் கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் இதுவாகும். உலகில் இடம்பெறும் விடயங்கள் இந்த சபையை கூட கடுமையாக பாதிக்கும் என நான் கூற வேண்டும். இதுபோன்ற உலக நெருக்கடிகளின் போது வெளி உலகத்தை சார்ந்துள்ள நாடுகள் உதவியற்ற நிலைக்கு தள்ளப்படும். நாம் நமது பொருளாதாரத்தை தேசிய மட்டத்தில் கட்டியெழுப்பியிருந்தால் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க கூடியதாயிருந்திருக்கும். அதுதான் கொவிட்-19 எமக்கு கற்பித்த பாடம். நாம் ஏற்கனவே இந்நிலையை புரிந்துக் கொண்டிருந்தோம். அதனாலேயே சுபீட்சத்தின் நோக்கு தேசிய பொருளாதாரம் குறித்தும், தேசிய விவசாய வளர்ச்சி தொடர்பிலும் எண்ணினோம். இந்த வரவு செலவுத் திட்டம் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மற்றைய வரவு செலவுத் திட்டங்களில் காணப்பட்ட நோக்கமல்ல இந்த வரவு செலவுத் திட்டத்தில் காணப்படுவது. மற்றைய வரவு செலவுத் திட்டங்களின் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை ஈடுசெய்வதே முதன்மையாகும். எனினும் இந்த வரவு செலவுத் திட்டம் உள்ளூர் விவசாயிகள், உள்ளூர் தொழிலதிபர்கள், உள்ளூர் உற்பத்தியாளர்கள் ஆகியோரை மேம்படுத்தி உலகை எதிர்கொள்ளக்கூடிய மற்றும் இதுபோன்ற பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது. சுபீட்சத்தின் நோக்கில் விவசாயத்துறை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். நமக்கான உணவை நாமே உற்பத்தி செய்வது நமது நாட்டை கட்டியெழுப்புவதற்கான சிறந்த வழியாகும். இவ்வளவு காலமும் ஒரு கிலோகிராம் நெல்லிற்கு 32 ரூபாயே செலுத்தப்பட்டது. நாம் அதனை 50 ரூபாய் வரை அதிகரித்தோம். உரத்தை இலவசமாக நிவாரணமாக பெற்றுக் கொடுத்தோம். இவ்வாறு செய்ததன் ஊடாக விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பானது.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை என எமது விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர். எனினும், நாம் ஒருபோதும் வெறுமனே பணத்தை செலவிடும் திட்டங்களை ஆரம்பிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதிர்வரும் தேர்தலை எதிர்பார்த்து எந்தவொரு விடயமும் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை. நாம் அந்த மோசடி செயலை மக்களுக்கு செய்ய மாட்டோம். இந்த வரவு செலவுத் திட்டத்தில் 350 பில்லியன் ரூபாயை நெடுஞ்சாலைக்காக ஒதுக்கியுள்ளோம். ஆளுநர் எட்வட் பார்ன்ஸின் பின்னர் எமது ஆட்சிக் காலத்திலேயே மிகப்பெரிய சாலை புரட்சி இடம்பெற்றது என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். நாட்டிற்கு சேவையாற்றியவர்களின் பட்டியலில் ஒரு வெளிநாட்டவரை உட்படுத்திய கூறுவது வருத்தமான விடயமாகும். இத்துறைக்கு அவர் ஆற்றியுள்ள சேவை போன்றுகூட எதிர்க்கட்சியினர் செய்தில்லை என்பதனாலேயே அந்த பெயரை ஞாபகப்படுத்த வேண்டியேற்பட்டது. எனினும் நாம் 2005-2010 ஆண்டு காலப்பகுதியில் அமைத்த வீதிகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன்வைத்தனர். ஆனால் அந்த வீதிகளின் ஊடாக இன்று பயன்பெறுவது நாடாளுமன்ற உறுப்பினர்களும், செல்வந்தர்களும் மாத்திரமா என வினவ விரும்புகிறேன். இன்று அந்த வீதிகளில் பயணிப்பது கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், பொது போக்குவரத்து சேவைகளின் உரிமையாளர்கள் ஆகியோராகும். வாழைப்பூவிலிருந்து, தயிர் சட்டி வரை பெரும்பாலானவை நகரத்திலுள்ள சந்தைகளுக்கு கொண்டுவரப்படுவது இந்த வீதிகளிலேயாகும். 05 ஆண்டுகளில் 2-3 மீட்டர் நீளமான வீதிகளை அமைக்க முடியாதவர்களுக்கு இவற்றை புரிந்துக் கொள்ள முடியாது. கடன் குறித்து குறைக் கூறிக் கொண்டிருந்தவர்களுக்கு இவற்றை புரிந்துக்கொள்ள முடியாது. நாம் இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் செலவிடும் 350 பில்லியன் ரூபாய் பொதுமக்களின் பைகளில் இட்ட 350 பில்லியன் ரூபாய் என்றே நான் கூற வேண்டும். அதுமாத்திரமின்றி நாம் இதுவரை குடிநீருக்கு என 135 பில்லியன் ரூபாயினை ஒதுக்கியுள்ளோம். 2024ஆம் ஆண்டளவில் அனைத்து மக்களுக்கும் குடிநீரை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 2 ஆயிரம் பில்லியன் டொலர் மதிப்பிலான மேலும் திட்டங்களை இந்நாட்டில் செயற்படுத்துவோம். 600 மெகாவொட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையமும் அதில் உள்ளடங்கும். அதேபோன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், துறைமுகம் என்பவற்றை விரிவுபடுத்தவும் நாம் அந்த தொகையை ஈடுபடுத்துவோம். இவை அனைத்தும் பொதுமக்களுக்கே வழங்கப்படும். அதுமாத்திரமின்றி நாம் கடந்த காலத்தில் நாட்டில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டோம்.

வரலாற்றில் முதல் முறையாக 2020 ஆகஸ்ட் 20 ஆம் திகதி 2187/10 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் சிறப்பு முன்னுரிமை பிரிவுகளை அடையாளம் கண்டு அமைச்சுக்கான தெளிவான நோக்கம் மற்றும் செயற்பாடுகள் ஒதுக்கப்பட்டன. அதேபோன்று அவற்றின் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை அளவிடுவதற்கான தெளிவான அளவுகோல்களும் வழங்கப்பட்டன.

தற்போது வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்படும் நிதி நமது நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் சொந்தமானது. முதல் முறையாக இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதான கணக்கியல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமையால் ஒதுக்கீடு செய்யப்படும் நிதிக்கு அவர்கள் நேரடியாக பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்தின் கொள்கையை தெளிவாக செயற்திறனுடன் செயற்படுத்த இடமளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பல சட்டங்களும் விதிமுறைகளும் வழக்கற்றுப் போய்விட்டன. அதற்கமைய நாணய விதிமுறைகள், கொள்முதல் வழிகாட்டுதல்கள் மற்றும் நிலச் சட்டங்கள் போன்ற நடைமுறைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன. 59 சுற்றறிக்கைகளைத் தொகுத்து தெளிவான பண விதிமுறைகளைக் கொண்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. புதிய நாணய விதிமுறைகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு 2021 முதல் காலாண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான வழக்குகள் தீர்க்கப்படாது நீதிமன்றத்தில் குவிந்து கிடப்பதாக எமது நீதி அமைச்சர் அண்மையில் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டிருந்தார். அதற்காக, நீதிபதிகள் 20 பேரை நியமித்து வழக்குகளை தீர்ப்பதற்கான சந்தர்ப்பத்தை அதிகப்படுத்தினோம். சரியான நேரத்தில் நீதி நிலைநாட்டப்படாவிடின் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது என்று நாம் கூறுகின்றோம். அதனால் நீதிமன்ற நிர்வாகத்திற்கென நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், அவற்றின் செயல்திறனை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். பாழடைந்த நிலையிலுள்ள நீதிமன்றங்கள் விரைவில் புனரமைக்கப்படும். இவையும் பொதுமக்களுக்கு சொந்தமானவை என்பதை ஞாபகப்படுத்த வேண்டும்.

வரி குறைப்பின் மூலம் அரச வருவாய் குறைவடையும் என பலரும் குறை கூறினர். இந்த வரி விதிப்பினால் அதிகளவு பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் ஆவர். நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சர் அன்று ராஜபக்ஷ வரி என்றும் ஒரு வரியை விதித்தனர். இந்த வரி விதிப்பினால் நாட்டின் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பல வர்த்தக நடவடிக்கைகள் மூடப்பட்டன. சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்தன. நாம் வரி சுமையை குறைத்தோம். வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல  முடியாது, வரி வீதத்தில் இலக்கம் காணப்படினும் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்குமா? அரசாங்கம் வரி பெற வேண்டுமாயின் வர்த்தக நடவடிக்கைகள் வெற்றிகரமாக செயற்பட வேண்டும். நாம் இந்த வரிச் சுமையை குறைத்தோம். எனினும் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை. 2020இன் முதல் 10 மாதங்களில் மதிப்பிடப்பட்ட வருமான வரியில் 75 வீதத்தை பெற்றுக்கொள்ள முடியுமானதாயிற்று. கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக இறக்குமதி குறைந்த போதிலும் சுமார் ஆயிரத்து 200 பில்லியன் ரூபாய் அரச வருமானம் பெற்றமை உயர்ந்த செயல்திறனாகும்.

ஒரு சிக்கலான வரி முறைக்கு பதிலாக எளிய வரி முறையொன்றை ஏற்படுத்துவதன் முதல் படியாக, கடன் திருப்பிச் செலுத்தும் வரி, பொருளாதார சேவை கட்டணம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புதல் வரி போன்ற பல வரிகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன் சிகரெட், மதுபானம், பந்தயம், சூதாட்டம், தகவல் தொடர்பு மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல வரிகளுக்கு பதிலாக சிறப்பு பொருட்கள் மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்துவதற்கு 2021 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த வரியை ஒன்-லைன் ஊடாக செலுத்த முடியும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தவுடன் பலர் எமது கடன் குறித்து கவலை வெளியிட்டனர். எமக்கு கடனை செலுத்த முடியாது போகும் என எதிர்க்கட்சி கடந்த செப்டம்பர் மாதம் முதல் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தது. எமது கடன் மதிப்பீடுகளில் நாம் மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்த சபையில் சிலர் கூறினர். ஆனால் சமீபத்தில் கடன் மதிப்பீட்டு நிறுவனத்தின் புள்ளிவிபரங்களுக்கமைய உலகில் சுமார் 40 நாடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன. இவர்கள் அனைவரும் எமக்கு ஒக்டோபர் மாதத்திற்கான பில்லியன் கணக்கான கடன் தவணையை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றே கூறினர். ஆனால் ஒக்டோபர் 2ஆம் திகதி நாம் செலுத்த வேண்டிய அந்த பில்லியன் தொகையை உரிய நேரத்தில் செலுத்தினோம். எனினும், ஒக்டோபர் 4 ஆம் திகதி கடன் மதிப்பீட்டு அறிக்கையில் நாம் வீழ்த்தப்பட்டோம். இருப்பினும், பிற 40 நாடுகள் கடன் மதிப்பீட்டு அறிக்கையில் வீழ்த்தப்பட்டமை குறித்து இந்த சபையினல் பேசப்படவில்லை. அதேபோன்று எமக்கு செலுத்த முடியாது போகும் என எண்ணிய கடன் தவணையை செலுத்தியமை குறித்தும் எவரும் பேசவில்லை. அப்படித்தான் வரவு செலவுத் திட்ட விவாதம்.

அதுமாத்திரமன்றி, ஏராளமான செலுத்தப்படாத பற்றுச்சீட்டுகளை கொண்டதொரு அரசாங்கமே எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் செலுத்தப்படாத ஏராளமான பற்றுச்சீட்டுகள் 2020ஆம் ஆண்டுக்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆண்டில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகளை இந்த ஆண்டு செலுத்த வேண்டி ஏற்படும்போது அரச செலவு முகாமைத்துவத்தின்போது பல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். எனினும், நாம் அந்த பற்றுச்சீட்டுக்கள் அனைத்தையும் இத்தருணத்தில் செலுத்தி முடித்துள்ளோம். இலங்கை ஒருபோதும் கடனை திருப்பிச் செலுத்துவதிலிருந்து தவறியதில்லை. வெளிநாடடிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை 2019ஆம் ஆண்டு இறுதியளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 43 வீதம் அதிக மட்டத்திலேயே காணப்பட்டது. அதனால் இந்த ஆபத்தை தவிர்ப்பதற்கு உள்ளூர் மூலங்களிலிருந்து கடன்களைப் பெறுவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். குறைந்த வட்டி விகிதம் இதற்கு ஒரு பெரிய உதவியாக இருந்துள்ளது என்று நான் கூற வேண்டும்.

எமது பொருளாதார கொள்கையின் சரியான தன்மை காரணமாகவே இந்த கடன்களை எங்களால் செலுத்த முடிந்தது.  கொவிட் -19 காரணமாக, ஒரு நாளைக்கு அதிக  செலவுகள் இருக்கும் நிலையிலும் இவ்வாறு கடனை திருப்பிச் செலுத்த முடிந்தது. எமக்குத் தேவையானவற்றையும், நமக்குத் தேவையில்லாதவற்றையும் பாரியளவில் இறக்குமதி செய்வது நீண்ட கால வழக்கம். காத்தாடி (பட்டம்) வரை பொருட்களைக் கொண்டு வரப்பட்டன. இந்த நாட்டிற்கு ஏராளமான வாகனங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. நாங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தினோம். நாங்கள் செய்த பொருளாதார சீர்திருத்தங்களை இந்த நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர். இன்று உள்ளூர் தொழிலதிபர்கள், விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கு மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கும் காலம். தற்போது நிலவும் கொவிட் தொற்றுநோய்க்கு இல்லாவிட்டால், தற்போதுள்ள மேலான பொருளாதார விதிகளின் கீழ் அவர்கள் முன்னேற முடியும் என்பதை அவர்கள் தெளிவாக அறிவார்கள். இதன் விளைவாக, எங்கள் ஏற்றுமதி வருமானம் வேகமாக அதிகரித்தது. செப்டம்பர் 2020 இல், ஏற்றுமதி 1,000 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது. இது செப்டம்பர் 2019 உடன் ஒப்பிடும்போது 4.8மூ அதிகரிப்பாகும். ஆகஸ்ட் 2020 உடன் ஒப்பிடும்போது 5.6மூ அதிகரிப்பாகவுள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவாக, இலங்கை ரூபாய் பெறுமதி செப்டம்பர் மாதத்தில் கணிசமான அதிகரிகரித்துள்ளது. இதுபோன்ற ஒரு தொற்றுநோய் இருந்தபோதிலும், இலங்கை ரூபாயின் பெறுமதி குறையாமல் கொண்டு செல்ல முடிந்தது என்பதே எங்கள் பார்வையின் வெற்றி என்பதை நான் இந்த மன்றில் கூறவேண்டும். உலகளாவிய சந்தை நிலைமையை சமாளிக்கும் திறனை இது காட்டுகிறது. கொவிட் -19 தொற்றுநோய் இன்று வரை பரவத் தொடங்கிய காலத்திலிருந்து ‘ஏ’ என்ற எழுத்தின் வடிவத்தில் ஏற்றுமதியை மீட்டெடுக்க முடிந்தது என்பது ஒரு பெரிய சாதனை. எங்கள் ஏற்றுமதி அதிகரித்தது மற்றும் இறக்குமதி குறைவாக இருந்தது. உள்ளூர் கொள்வனவு பற்றாக்குறை குறைக்கப்பட்டது. நமது வெளிநாட்டு இருப்பு அதிகரித்தது. இதுதான் எங்களுக்கு முன்னோக்கி செல்லுவதற்கான பாதை.

மேலும், கொவிட் தொற்றுநோயானது, விரைவில் நாட்டை தொழில்நுட்பமயமாக்க வேண்டும் என்று நமக்குக் கற்பித்தது. 2013 இல் அறிமுகப் படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த திறைசேரி தகவல் வலையமைப்பு மூலம் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை நாங்கள் தயாரித்தோம் என்பதினூடாக நான் மகிழ்ச்சியடைகிறேன். 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள், முழு பொதுத் துறையையும் இந்த வலையமைப்பிற்குள்  உள்வாங்குவோம். அதேபோல இணைய கொள்முதல் முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள், இந்த முறைகளுக்குள்ளே அனைத்து அமைச்சுக்களையும் திணைக்களங்களையும் உள்வாங்க முடியும்.

2013ஆம் ஆண்டு நாம் அறிமுகப்படுத்திய வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் முறையை (RAMIS) மேலும் விரிவுபடுத்தி அரச வருவாயை அதிகப்படுத்துவோம். அத்துடன் சகல கொடுக்கல் வாங்கல்களுக்கும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்துவதன் மூலம் காணப்படும் செயற்திறனற்ற நடவடிக்கை தவிர்த்துக் கொள்ள முடியும். 2019 நவம்பர் மாதம் நாம் அறிமுகப்படுத்திய வரி மறுசீரமைப்பு மிகவும் அத்தியவசியமானது என கொவிட்-19 தொற்றினால் ஏற்பட்ட தாக்கத்தின்போது உறுதிபடுத்தப்பட்டது. வரி கொள்கை ஸ்திரத்தன்மை காரணமாக முதலீட்டு நம்பிக்கை மேலும் வலுப்படுத்தப்பட்டது. இது கொழும்பு பங்குச் சந்தை குறிகாட்டிகளின் செயல்திறனில் நன்கு பிரதிபலிக்கிறது.

சிறந்த நிதி முகாமைத்துவத்தின் மூலம் அரச நிதி ஒருங்கிணைப்பை மேலும்  பராமரித்து அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை யதார்த்தமாக்கி 2025ஆம் ஆண்டளவில் வரவு செலவுத் திட்ட  பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.0 சதவீதமாகக் குறைப்பதே எங்கள் குறிக்கோள்.

நான் இந்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற பொதுச் செயலாளர் உள்ளிட்ட பாராளுமன்ற ஊழியர்களுக்கும், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.