மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும்!அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பதிலடி

மூன்று நேரம் சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இந்த அரசோடு சேர்ந்திருப்பவர்களிடம் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் இருக்கின்றதா? என பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்றைய தினம் (12) தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கரணாகரம், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், கட்சியின் உபதலைவருமான பிரசன்னா இந்திரகுமார் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்றைய அரசு தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளிலே மிகவும் மேசமான விடயங்களைச் செய்வதற்கான வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றது. எமது வடக்கு கிழக்கிலே எமது மக்களின் பூர்வீக நிலங்களை, நாம் அதன் பூர்வீகக் குடிகள் என்பதை இல்லாமல் ஒழிக்கின்ற செயற்பாடுகளைச் செய்து வருகின்றது. குறிப்பாக வன இலாக, மகாவலி போன்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு அரசு கபடத்தனமாக எமது காணிகளை அபகரித்துக் கொண்டு வருகின்றது. இந்த அரசின் ஜனாதிபதியின் திட்டத்தின் தன்மையைப் பார்க்கும் போது வரலாற்றுடன் வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் பூர்வீகமாக வாழக்கூடிய எமது தமிழ் மக்களைச் சிதைக்கின்ற மோசமான செயற்பாட்டைச் செய்து வருகின்றது. அந்த வகையிலே பல பிரச்சினைகளை நாங்கள் எதிர்கொள்ளக் கூடிய சூழ்நிலை இப்போது காணப்படுகின்றது.

கொரோனா சுகாதார நிலைமைகளில் இராணுவத்தினுடைய பிரசன்னம், நேர்முகத் தேர்வுகளில் இராணுவத்தின் பிரசன்னம், திணைக்களத் தலைமைப் பதவிகளில் இரணவத்தின் பிரசன்னம் இப்படியான முக்கியமான விடயங்களில் முப்படைகளின் ஆளுமையைக் காட்டுகின்ற வகையிலே இந்த அரசாங்கம் தன்னுடைய செயற்பாட்டைச் செய்து வருகின்றது. இந்த நிலையிலே தமிழர்கள் கட்சி ரீதியாகப் பிரிந்து செயற்படுகின்ற போது அவர்களின் பிரித்தாளுகின்ற விடயம் இலகுவாக இருக்கும்.

தற்போது மட்டக்களப்பில் அரசாங்கத்துடன் இருக்கும் பிள்ளையான், கருணா, விஜயாழேந்திரன் ஆகியோர் மட்டக்களப்பு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்கள். இருப்பினும் இந்த மாவட்டத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் அவர்களிடம் இருக்கின்றதா? அவர்களின் கதைக்கலாமே தவிர செயல் வடிவத்திலே ஒன்றுமே செய்ய முடியாது. மக்கள் வாக்குகளை அவர்களுக்கு வழங்கியிருந்தாலும் எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்களால் முடியாது.

இன்று மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரை பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் திட்டமிட்டு மிகவும் மோசமான குடியேற்றத்தைச் செய்கின்ற வழிகளைக் கையாளுகின்றது. இதன்போது நாங்கள் மகாவலி அமைச்சரிடம் பேசுகின்ற போது அனைவரும் இந்த நிலம் பண்ணையாளர்களுக்கே மேய்ச்சல் நிலமாக வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தோம் ஆனால் இங்கு மாவட்ட ரீதியில் அவர்களால் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றது. எமது மக்களின் வாக்குகளைப் பெற்று அரசோடு இருப்பவர்கன் இந்த நிலத்தைப் பெற்றுக் கொடுத்தால் அது பெரிய உபகாரம்.

இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் போது தேசியத்தோடு நிற்கும் கட்சிகள் உளப்பூர்வமாக மக்களின் விடுதலைக்காக செயற்படுகின்ற கட்சிகளாக இருப்பின் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். அரசுடன் இருப்பவர்களை நாங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் தேசியத்தோடு நிற்கும் கட்சிகள் ஒற்றமையாகச் செயற்பட வேண்டிய காலம் தற்போது வந்திருக்கின்றது. தமது கட்சி முன்நோக்கி வரவேண்டும் என்று இருந்தாலும் கூட மக்களுடைய நிலங்கள், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமாக இருந்தால் கொள்கையில் ஒன்று பட்டவர்களாகிய நாம் ஏன் ஒன்றுபட முடியாது.

தற்போது தேசியத்தோடு நிற்கின்ற எட்டு கட்சிகள் ஒன்றிணைந்து பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். என்னைப் பொருத்தவரையிலே வடக்கு கிழக்கிலே இருக்கின்ற தேசியத்தோடு நிற்கின்ற கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற காலகட்டத்திலே நாங்கள் இருக்கின்றோம். இதனைத் தவறவிட்டோமாக இருந்தால் எமது மக்களின் பூர்வீகம், வரலாறு, போராட்டம், இறையான்மை அத்தனையும் பிழைத்து எம்மையெல்லாம் வந்தேறுகுடிகள் என்ற நிலைக்குத் தள்ளிவிடுவார்கள்.

தற்போது ஆளும் தரப்பில் உள்ளவர்கள் பலர் பலவாறு பேசுகின்றார்கள். நாம் எமது மக்களின் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் தெரிவித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். பாராளுமன்றத்தில் அரசு பக்கமாக இருக்கின்ற பாராளுமன்ற உப்பினர்களின் தமிழ் மக்கள் தொடர்பான சிந்தனை படுமோசமாகவும், வித்தியாசமாகவும் இருக்கின்றது.

தமிழ் மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடு கொடுத்தால் போதுமென்று ஒரு அமைச்சர் சொல்லியிருக்கின்றார். எமது மக்கள் உணர்வோடு வாழ்ந்த இனம். தங்கள் உயிரைத் தியாகம் பண்ணி இந்த மண்ணுக்காக அர்ப்பணித்த இனம். எமது இனத்தைப் பற்றிய விமர்சனத்தை மிகச் சாதாரணமாக அவர் சொல்லியிருக்கின்றார். மூன்று நேரச்சாப்பாடு பிச்சை எடுப்பவருக்கும் கிடைக்கும். உணர்வோடு வாழும் எமது தமிழ் மக்களை இப்படியான சிந்தனையோடே பார்க்கின்றார்கள் என்றால் எமது மக்களின் பூர்வீக வரலாறு இவர்களால் சிதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தற்போது இருக்கின்ற அரசாங்கம் எமது மக்களை அழித்து, படுகொலை செய்து, மனித உரிமைப் பேரவையிலே விசாரணை செய்யப்படுகின்ற நிலைக்கு வந்துள்ளது. அவர்கள், அவர்கள் நிலைப்பாட்டில் தான் இருக்கின்றார்கள். அண்மையில் சரத் பொன்சேகா கூறியிருந்தார் புரவிப் புயல் மாவீரர் தினத்தன்று வந்திருக்க வேண்டும் என்று. அதற்கு நான் பதிலளிக்கையில், தங்களுக்கு வாக்களித்தமை தொடர்பில் நாங்கள் வெட்கப் படுகின்றோம் என்று தெரிவித்தேன். இப்படியான சிந்தனையோடு தான் இந்த நாடாளுமன்றமும், அரசாங்கமும் இருக்கின்றது.

தமிழர்களை அழித்துவிட்டோம், மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுவிட்டோம். நாங்கள் நினைத்ததைச் செய்யலாம், யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்று இந்த அரசாங்கம் நினைக்கின்றது. நிச்சயம் இவர்கள் சர்வதேசத்திடம் பகைத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் எமது நாடு இன்னும் தன்நிறைவு காண்ட நாடாக இல்லை. உலக நாடுகளினுடைய அனுசரணையோடு இருக்கக் கூடிய நாடாகவே இருக்கின்றது. எனவே சர்வதேசத்தைப் பகைத்துக் கொண்டு இந்த நாடு ஒரு நாளும் செயற்பட முடியாது. எமது இனப்பிரச்சினை தொடர்பில் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா இந்தியா போன்ற நாடுகள் தற்போதும் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த அரசாங்கம் மிகவும் மூர்க்கத்தனமாக எமது மக்களின் இனப்பரம்பலையும், இறையான்மையையும் தடுக்கும் வகையிலே செயற்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்திலே நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட முன்வரவேண்டும். அரசியல் சாசனம் புதிதாக எழுதப்படப் போகின்றது என்று சொல்லுகிறார்கள். எனவே எமது யோசனைகளைத் தனித்தனியாகக் கொடுப்பதை விட எமது இனப்பிரச்சினை சார்ந்த விடயங்களையும், எங்களுடைய மக்களின் நிலப் பிரச்சினை போன்ற சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக ஒரு தீர்வுத் திட்டத்தை வழங்க வேண்டும் என்பதிலே நாங்கள் தயாராக இருக்கின்றோம். அந்த வகையில் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்வு யோசனையை முன்வைப்பதென்பது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்திலே தமிழ் தேசியக் கட்சிகள் தங்களின் விருப்பங்களிற்கு அப்பால் எமது மக்களின் பிரச்சினை என்று செயற்படுபவர்களாக இருப்பின் இனிவரும் காலங்களில் ஒற்றுமையான செயற்பாட்டைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.