அரசியல் கைதிகள் விடுதலைக்காக அனைவரும் ஓரணியில் நில்லுங்கள் – முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பில் அரச கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதங்கள் இன்றி, குறுகிய கட்சி நலன்களைப் புறந்தள்ளி, தனித்தோடும் குறுக்கு வழிகளை – தாங்கள் மட்டுமே தூய்மையானவர்கள், ஏனையோர்கள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவர்கள் என்ற இறுமாப்பு எண்ணங்களைத் தவிர்த்து சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நேர்மையாக – தீவிரமாக ஈடுபட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“அரச ஆதரவாளர்கள் – அரசியல்வாதிகள் உட்படத் தற்போது சிறைவாசம் அனுபவிக்கும் பலரை விடுவிக்கக் கோரி அரச தரப்பினரால் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களை விடுவிப்பதற்கு வழி தேட வேண்டிய நிலையில் ஜனாதிபதியும், பிரதமரும் இருக்கின்றார்கள். அவர்களைச் சட்டபூர்வமாக விடுவிக்க முடியாது என்பதும், எல்லோரையும் பொதுமன்னிப்பில் விடுவித்தால் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதும் தெரிந்த விடயம்.
இப்போது, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புட்ட 607 கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்புவது பற்றியும், சிறுகுற்றங்கள் செய்து சிறையிலுள்ள 800 கைதிகளை விடுவிப்பதற்கும், தூக்குத் தண்டனைக் கைதிகளின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கும் சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது.
இப்படிப் பலர் விடுவிக்கப்படும்போது, அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் இத்தகைய காரணங்களைக் காட்டி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் சாத்தியங்கள் உண்டு. அதற்காகச் சில அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது அரசின் தேவையாகவும் இருக்கலாம்.
இத்தகைய சந்தர்ப்பதில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயம். எனினும், ஒரு சில அரசியல் கைதிகளை மட்டும் விடுவிப்பது என்ற நிலையுடன் அந்த முயற்சி நின்றுவிடக் கூடாது என்பதுதான முக்கியமான விடயம். வழக்கு நிலுவையில் உள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்ற காரணங்களை அரசு கற்பித்து, பலரின் விடுதலை தட்டிக்கழிக்கப்படும் சந்தர்ப்பங்களும் உள்ளன. அதனால் சட்டமா அதிபர் வழக்குகளைத் திரும்பப் பெறுவதன் ஊடாக, அவர்களைப் பொதுமன்னிப்புக்கு உரியவர்களாக்க முடியும் என்ற விடயம் வலியுறுத்தப்பட வேண்டும்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் நேர்மையாகவும், தீவிரமாகவும் ஈடுபட வேண்டும் என்று கோருகின்றோம்” – என்றுள்ளது.
கருத்துக்களேதுமில்லை