இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களைக் கைதுசெய்யவும்! வடக்குக் கடற்படையினருக்கு அவசர உத்தரவு…

வடக்கு மாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் படகுகளுடன் கைதுசெய்யுமாறு வடக்குக் கடற்படையினருக்கு அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதால் இலங்கை மீனவர்களின் தொழில் பாதிக்கப்படுவது மட்டுமன்றி தொழில் உபகரணங்களும் சேதமடைகின்றன. எனவே, இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துங்கள் என மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறான நிலைமையில் இந்திய மீனவர்கள் சிலர் படகுகளுடன் கைது செய்யப்படுவது வழமையாக இருந்தபோதும் இந்த வருடம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தமையால் இந்திய மீனவர்களைக் கைதுசெய்யும் கடற்படையினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுகின்றனர் என்ற காரணத்தைக் காட்டி இந்திய மீனவர்கள் கைது இடைநிறுத்தப்பட்டது.

கொரோனா காரணமாக இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டும் இந்திய மீனவர்களைக் கைது செய்வதில்லை என்ற தகவல் இந்தியாவில் பரவிய காரணத்தால் இந்திய மீனவர்கள் முல்லைத்தீவு, நெடுந்தீவு, பருத்தித்துறை என வடக்கின் சகல பகுதிகளிலும் கரையில் இருந்து சுமார் 4 கிலோ மீற்றருக்கும் உட்பட்ட பகுதியில் படகுகளுடன்  ஊடுருவி மீன்பிடியில் ஈடுபடுகின்றனர். இதனால் தமது வாழ்வாதாரம் அழிக்கப்படும் நிலைமை காணப்படுகின்றது எனத் தெரிவித்த உள்ளூர் மீனவர்கள் இன்று யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்ற தகவல் வெளிவந்திருந்தது.

இவ்வாறான ஒரு சூழலிலேயே வடக்கு மாகாண கடற்படையினருக்கு அவசர உத்தரவு ஒன்று இன்று காலை அரசின் உயர்மட்டத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் அனைவரையும் படகுகளுடன் கைதுசெய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.