திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான துறைசார் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான துறைசார் விடயங்கள் பற்றிய இரண்டாம் கட்ட கலந்துரையாடல் இன்று(22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தலைமையில் நடைபெற்றது.
சுபீட்சத்தின் நோக்கு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய பிரதமரின்  ஆலோசனை மற்றும்  வறுமையொழிப்பு பற்றிய ஜனாதிபதி செயலணியின் பிரதானி பெசில் ராஜபக்சவின் வழிகாட்டலுக்கமைய மாவட்ட மட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் துறைசார் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கு தீர்வுகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் என்றும் அதன்படி திருகோணமலை மாவட்ட விசேட கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் மாவட்ட செயலகத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
சமூக உட்கட்டமைப்பு, வாழ்வாதாரம், உள்ளூர் உற்பத்தி, கிராமிய உட்கட்டமைப்பு ஆகிய பிரதான விடயங்கள் மற்றும் அதன் உபகூறுகளை உள்ளடக்கியதாக இக்கூட்டம் வெவ்வேறு தினங்களில் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது.
இதன் மூலம் மாவட்ட மட்ட மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெறுவதுடன் துறைசார் அபிவிருத்திக்கும் வழிசேர்க்கும். அத்துடன் அடுத்த வருடத்திற்கான நிதி ஒதுக்கீட்டில்  திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கான கூடிய நிதியை பெற்றுக்கொள்ள  ஏதுவாக அமையும். எனவே துறைசார் விடயங்கள் தொடர்பிலான ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை வழங்குமாறும் குறித்த முன்மொழிவுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வருவதன்மூலம் மாவட்ட அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும் என்று அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எம்.ஏ.அனஸ், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் , பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.