வீதியில் நின்ற நபரை வெட்டிய குழுவின் 4 சந்தேக நபர்கள் சரண்…

முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டி மரணமடையச்செய்து தலைமறைவாகி இருந்த  நான்கு சந்தேக நபர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

இன்று (30) முற்பகல் குறித்த சந்தேக நபர்களை தேடி பொலிஸ் குழுக்கள் தேடுதலை மேற்கொண்ட நிலையில் குறித்த நால்வரும் சரணடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏலவே குறித்த தாக்குதலில் ஈடுபட்டதாக 6 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையும் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 2020.12.26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச்செய்து தப்பி சென்றிருந்தனர்.

இவ்வாறு படுகாயமடைந்து அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த  நபர் சிகிச்சை பலனளிக்காமையின் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று(29) மரணமடைந்தார்.

இதனை தொடர்ந்து தலைமறைவாகி இருந்த சந்தேக நபர்களை கைது செய்வதற்காக  அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின்  படி    சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில்  பொறுப்பதிகாரி நௌபரின்  வழிகாட்டலில்     குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா  தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய ஏற்கனவே கைதாகிய சந்தேக நபரின் தகவலுக்கமைய தலைமறைவாகி இருந்த மேலும் 5 சந்தேக நபர்கள்  மத்திய முகாம் மற்றும் வெல்லாவெளி பொலிஸ் நிலைய பகுதியில் வைத்து இன்று நள்ளிரவு சம்மாந்துறை குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் வாள் வெட்டிற்கு இலக்காகி  காயமடைந்து  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவரான 30 வயதுடைய கணேசமூர்த்தி ரஜிதரன் சிகிச்சை பலனளிக்காமையினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இடம்பெற்ற தேடுதலை அடுத்து 4   சந்தேக நபர்கள்  இன்று  சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.