2021 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு 05 ஆம் திகதி கூடவுள்ளது …

அடுத்த ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு வாரத்தை ஜனவரி 05 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு இன்று (30) முற்பகல் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க அவர்கள் அறிவித்துள்ளார்.

குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற அறிக்கையிடலுக்காக மீண்டும் ஊடகங்களை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும் கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளுக்கு  அமைய தயாரிக்கப்பட்ட வழிகாட்டல்கள் கீழ் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்குள் பிரவேசிப்பதற்கு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இக்கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பர்னாந்து, அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா, நிமல் சிறிபால டி. சில்வா மற்றும் அலி சப்ரி, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரிஎல்ல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், அனுர குமார திசாநாயக்க, டிலான் பெரேரா மற்றும் மனோ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஜனவரி 05 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 07 ஆம் திகதி வியாழக்கிழமை வரை முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4.30 வரை பாராளுமன்றம் கூடும்.

ஜனவரி 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை பாராளுமன்றம் கூடும்.

ஜனவரி 05 ஆம் திகதி மற்றும் 07 ஆம் திகதி ஆளும் கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறும். சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் பிற்பகல் 4.30 மணி முதல் 5.30 மணி வரை இடம்பெறும்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்திற்கு எடுக்கப்படும். ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை எதிர்கட்சியினால் முன்வைக்கப்படும் நாட்டின் தற்போதைய நிலைமை பற்றிய பிரேரணை சபை ஒத்திவைப்பு விவாதமாக முன்னெடுக்கப்படும். ஜனவரி 08 ஆம் திகதி முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 05 ஆம் திகதி கடை, அலுவலக ஊழியர் திருத்த சட்ட மூலம் உள்ளிட்ட 04 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படுவதுடன், ஜனவரி 06 ஆம் திகதி தண்டனை சட்டக் கோவையின் திருத்த சட்டமூலம் உள்ளிட்ட 03 திருத்த சட்ட மூலங்கள் விவாதத்திற்கு எடுக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக, ஜனவரி 07 ஆம் திகதி புலமைச் சொத்து (திருத்த) சட்ட மூலம் இரண்டாம் வாசிப்பு மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட 10 கட்டளைகள் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனவரி 06 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 10.30 மணி வரை பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தஸநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.