குப்பையினுள் சென்ற 150,000 ரூபா பணத்தை தேடிக்கொடுத்த கல்முனை மாநகர சபை ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிப்பு

திண்மக்கழிவகற்றல் சேவையின்போது ஒரு வீட்டில் இருந்து ஒப்படைக்கப்பட்ட குப்பைப் பொதியினுள் கண்டெடுக்கப்பட்ட 150,000 ரூபா பணத்தை அவ்வீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த முன்மாதிரியான செயற்பாட்டை பாராட்டி, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளர் உள்ளிட்ட 05 ஊழியர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (01) மாநகர சபை வளாகத்தில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி கல்முனை நகர மண்டப வீதியில் வழமைபோன்று கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அன்றைய தினம் குறித்த வீட்டு உரிமையாளர் தனது தங்க நகையொன்றை வங்கியில் அடகு வைத்து, பெற்றிருந்த 150, 000 ரூபா பணமும் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் சென்று, அப்பொதி அவ்வாகனத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கழிவகற்றல் வாகனம் சென்று நீண்ட நேரத்தின் பின்னர் வீட்டில் இருந்த பணம் காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அவர் உடனடியாக செயற்பட்டு, வாகனம் வேறொரு பகுதியில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அவர் வாகன சாரதி மற்றும் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, பணத்தை தேடிக்கண்டுபிடித்து உரிய நபரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதன் மூலம் கல்முனை மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டிக் கொடுத்தமைக்காகவே குறித்த மேற்பார்வையாளர், வாகன சாரதி மற்றும் தொழிலாளர்கள் உட்பட 05 ஊழியர்களும் மாநகர சபை நிர்வாகத்தினால் இவ்வாறு விருது வழங்கி கௌரவிக்கபட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் இவர்களது செயற்பாட்டையும் அர்ப்பணிப்புமிக்க சேவைகளையும் வெகுவாகப் பாராட்டிய மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், இவர்களது செயற்பாடு மாநகர சபைக்கு நற்பெயரை ஈட்டித்தந்தது மட்டுமல்லாமல் ஏனைய ஊழியர்களுக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என தெரிவித்தார்.

இந்த செயற்பாடானது பி.பி.சி. செய்திச் சேவையின் கவனத்தை ஈர்க்குமளவுக்கு சென்று, அதன் மூலம் தேசிய, சர்வதேச மட்டத்தில் மாநகர சபை ஊழியர்களின் நன்மதிப்பை பறைசாற்றியிருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் பிரதி ஆணையாளர் எம்.ஐ.பிர்னாஸ், பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப், வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன்  உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.