20 க்கு கையுயர்த்திய பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மௌனம் கலைத்தார் ஹரீஸ்!
(நூருல் ஹுதா உமர்)
20ம் திருத்த சட்டத்தை ஆதரிக்க முன்னர் நாங்கள் வைத்த முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே அது மாத்திரமின்றி பிராந்திய மக்களின் பிரச்சினைகள் முஸ்லிங்களின் பிரச்சினைகளை என்ன என்பதை அடையாளம் கண்டு உடன்பாடு கண்ட பின்னரே அரசுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த பிரச்சினைக்கான தீர்வை பெறவேண்டும் என்பதற்காக நாங்கள் எங்களின் மீது வீசப்படும் கடினமான விமர்சனங்களை பொறுத்துக்கொண்டு சமூக வெற்றிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்தையும் அதன் பின்னணியில் முஸ்லிங்களின் மனோ நிலைகள் பற்றியும் இந்த அரசின் போக்குகளினால் சிறுபான்மை மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை இழந்து போகும் தன்மைகள் தொடர்பிலும் அரசாங்கத்தின் ஜனாதிபதி, பிரதமர், அரசை இயக்கும் அரசின் முக்கியஸ்தரான முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ போன்றவர்களிடமும் தெளிவாக எடுத்துரைத்துள்ளோம்.
அதன் பின்பு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள் கட்டளையிட்டதன் காரணமாக சுகாதார அமைச்சினதிகாரிகள் பல கட்ட நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட தொடங்கினார்கள். அதே போன்று அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் நிலத்தடி நீர் தொடர்பிலான ஆய்வு அறிக்கையை உடனடியாக அரசுக்கும் சுகாதார அமைச்சுக்கு சமர்ப்பித்தார்.
பதவி பட்டங்களுக்காக மௌனமாக இருக்கிறார்கள் அல்லது சுகபோகங்களை அனுபவிக்கவே இப்படி இருக்கிறார்கள் என்று பேசுவோர் கடந்த கால முஸ்லிங்களின் வரலாறுகளையும், சமூகம் எதிர்நோக்கிய சிக்கல்களின் போது அரசியல் தலைமைகள் கையாண்ட உத்திகளையும் நினைவுபடுத்தி கொள்ள வேண்டும்.
வீதிக்கு இறங்கி நாங்களும் 15 நிமிடங்கள் ஊடகங்களுக்கு படம் காட்டுவதன் ஊடாக சமூகத்தில் நாங்களும் நல்ல பெயரை எடுத்து எங்களை நல்லவர்களாக பிரபல்யப்படுத்த முடியும். அதன் பின்னர் அரசிடம் இது தொடர்பில் எமக்கு ஆதரவாக பேச யாருமில்லாத நிலை உண்டாகும். எனவே தான் எல்லோருமாக போராடி சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது போல சமூக பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
ஒவ்வொரு கட்டங்களிலும் மிகவும் அவதானத்துடன் எமது நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு பிரதான காரணங்களாக இனவாத சக்திகள் எமக்கெதிராக அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடாது என்பதாகும்.
பெரும்பான்மை சமூகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்திடம் நமது உரிமைகளை எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும்? என்பது தொடர்பான உணர்ச்சிகளைத் தாண்டிய அறிவியல் ரீதியான அனுகுமுறைகள் அவசியம்.
முஸ்லிம் ஜனாஸா நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னிறுத்தி சுகாதார அமைச்சின் தொழிநுட்ப குழுவினரை சந்தித்து பேசியுள்ளோம். சுகாதார அமைச்சர், அமைச்சரவை அமைச்சர்கள், ஆளும் தரப்பு எம்.பிக்கள், பௌத்த பீடங்களின் மாநாயக்கர்கள், பௌத்தவாத அமைப்புக்களின் பிரதானிகள், ஊடக நிறுவன பிரதானிகளுக்கும் தெளிவுபடுத்தியதுடன் இன்னோரோன்ன பெரும்பான்மை இன, சிறுபான்மை இன கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசியுள்ளோம். அது மாத்திரமின்றி இந்த நாட்டிலுள்ள அதிகமான வெளிநாட்டு தூதரக தூதுவர்கள், உயஸ்தானிகர்கள், உயர் அதிகாரிகள் என பலரையும் சந்தித்து உதவியும் நாடியுள்ளோம். இவைகளையெல்லாம் நாங்கள் செய்ய பல விட்டுக்கொடுப்புகளையும், காத்திருப்புகளையும், சங்கடங்களையும் அனுபவித்தோம்.
இவைகளெல்லாம் அரசியலை முன்னிறுத்தி நாங்கள் செய்யவில்லை. இது இறைவனின் வார்த்தையுடனும் முஸ்லிங்களின் உணர்வுடனும் பிசைந்ததான போராட்டம். இவைகளை ஊடகங்களின் வாயிலாக பிரேக்கிங் நியூஸ் கொடுத்து தெற்கின் பேரினவாத இனவாதிகளை உசுப்பி விட எங்களினால் முடியாது. அந்த ஊடக வெளிச்சம் இப்போதைக்கு எங்களுக்கு தேவையில்லை. இது சமூகத்தின் கடமை. கடமையை பகிரங்கப்படுத்தி எங்களின் முகத்தில் நாங்களே இனவாதிகளை கொண்டு கரிபூச முடியாது. எமது சமூகத்திற்கான உரிமைகள் விடயத்தில் போராடுவது என்றால் தனக்கு கரும்பு திண்பது போல அதை யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.
எமக்கெதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி அசிங்கமான பிரச்சாரங்களை சிலர் அரங்கேற்றி வருகின்றனர். நாங்கள் பணங்களை பெற்றதாகவும்,பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காகவும் 20ற்கு ஆதரவு தெரிவித்தோம் என்று பல பொய்யான பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். சமூகத்தை காட்டிக் கொடுத்து இவைகளை பெற்றுக் கொள்வதற்கான எந்த தேவையும் எமக்கு இல்லை.
எங்களின் முயற்சிகளின் பலனாக அரசுக்கு வந்த பல பக்க அழுத்தங்களினால் அரசும் சுகாதார தரப்பும் தங்களின் நிலையிலிருந்து சற்று இறங்கிவந்து சில தீர்மானங்களை எடுத்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நல்லது நடக்கும் எனும் நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இதிலும் அரசியல் செய்யும் சிலர் இவற்றையெல்லாம் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் சட்டியை உடைக்க சொல்கிறார்கள். அது எங்களால் முடியாது.
இறுதியாக இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு பிற்பாடு முன்னாள் அமைச்சர் பஷில் ராஜாபக்ஸவோடு முக்கிய சந்திப்பை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச் சந்திப்பில் எமக்கான சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.என தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை