மட்டக்களப்பு- சின்னபுல்லுமலையில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் மீட்பு!
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னபுல்லுமலை பகுதியில் வீடு ஒன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பெருமளவான வெடி பொருட்கள் இன்று(03) மீட்கப்பட்டுள்ளன.
பொலிஸ் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினால் இந்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸ் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்ஆர்.குமாரசிறி ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டாரவின் தலைமையிலான குழுவினர் இவற்றினை மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் இருந்து ஜெலட்டின் குச்சி 729 குச்சுகளும், அமோனியம் நைத்திரேட் 25 கிலோ நிறையுடைய 24 பைகள், வெடி பொருட்களுக்கான 178 வயர் ரோல்கள், 105அலுமினியம் குச்சுகள்,31 வெடி என்பன இதன்போது மீட்கப்பட்டன.
இது தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் இதனுடன் தொடர்புபட்ட ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ்வாறு கைது செய்யப்பட்ட ஏறாவூர் லக்கி வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய குறித்த நபர் கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுவருவதுடன் அதற்கான அனுமதிப்பத்திரத்துடன் கல் உடைப்பதற்கு வெடிபொருட்களை பயன்படுத்தி உடைத்து வந்துள்ளதாகவும், கடந்த மாதம் கல் உடைக்கும் அனுமதிப்பத்திரம் முடிவடைந்துள்ளதாகவும் அதன் பின்னர் வெடிபொருட்களை கொள்வனவு செய்து வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை