கிண்ணியா வைத்தியசாலையில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

(எப்.முபாரக்)
கிண்ணியா தள வைத்தியசாலையின் பெண்களுக்கான 3 வது இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களும்  அதே விடுதியில் கடமை செய்யும் வைத்தியசாலை ஊழியர்களும் நேற்று (5) கொரோனா அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.ஏ. அஜீத் இன்று(6) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
 கிண்ணியா தள வைத்தியசாலையின் பெண்களுக்கான   3 வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே அந்த விடுதியோடு தொடர்பான 15 நபர்கள் அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். எனினும் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றாளியாக இனங்காணப்பட்டவர் குறிஞ்சாக்கேணி சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட சூரங்கல் கிராம சேவகர் பகுதியைச் சேர்ந்தவராவார். இவரே எமது சுகாதாரப் பிரிவில் முதலாவது கோரோனா வைரஸ் தொற்றாளியாவார் என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் இந்த நபரோடு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடைய 22 நபர்களுக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவருடன் மிக நெருக்கமானவர்கள் ஏழு பேரின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு,  PCR பரிசோதனைக்காக மட்டக்களப்பு கொரோனா மத்திய நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.