இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி சந்திப்பு!

 கொழும்பு இந்தியா இல்லத்தில், இன்று  7ம் திகதி முற்பகல் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாடியது. கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையிலான குழுவில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர்.   

 

இதன்போது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தொடர்பிலான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.  கடந்த ஒருவருடமாக மலையகத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் வாக்குறுதி, அறிவிப்பு என்ற அளவுகளில் மட்டுமே நிற்கிறது, ஆகவே இந்திய தோட்டத்துறை வீட்டு மற்றும் நலத்திட்டங்கள் உடன் மீள ஆரம்பிக்கப்பட வேண்டும்,  ராமேஸ்வரம்-மன்னார், தூத்துக்குடி-கொழும்பு கப்பல் சேவையை ஆரம்பிக்க உங்கள் பக்கத்தில் ஆவன செய்யுங்கள், நோர்வுட் கிளங்கன், நுவரெலியா மருத்துவமனைகளுக்கு பிசிஆர் இயந்திரங்கள் இரண்டு கொடுங்கள், இந்தியா, இலங்கையின் உண்மை நண்பன் என்பதை சிங்கள மக்களுக்கு விளக்கி கூறி எடுத்து காட்டுங்கள் ஆகிய கோரிக்கைககள் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டது.    

 

அத்துடன், 13ம் திருத்தம், மாகாணசபைகள் தொடர்பான இந்திய நிலைப்பாடு வரவேற்கத்தக்கது, புதிய அரசியலமைப்பு வரைபு குழுவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி யோசனைகளை முன் வைத்துள்ளது, எதிரணியில் இருந்தாலும் நாமே, இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் பெரிய அரசியல் இயக்கம், இன்றைய இலங்கை அரசு செல்வாக்கு இழந்து வருகிறது. வெகு விரைவில் இனவாதம் இல்லாத இலங்கையை எமது தேசிய கூட்டணி உருவாக்கும், ஆகிய கருத்துகளும்  தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.   

 

மேலும், இன்றைய நரேந்திர மோடி அரசே, இலங்கையில் வாழும் எமது மக்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே, இந்தியாவுக்கு வெளியே மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை நாம் பிரதமர் மோடிக்காக நோர்வுட்டில் கூட்டினோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணியினர்  இந்திய வெளிவிவகார அமைச்சர்  ஜெய்சங்கரிடம் கூறி, பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

 

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் தூதரக அதிகாரிகள், சந்திப்பின் போது  கலந்துக்கொண்டனர்.    

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.