பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதாரதிணைக்களத்தினருடனான விசேட கூட்டம்

(ந.குகதர்சன்)

நாட்டில் ஜனவரி பதினொராம் திகதி முதலாம் தவணைக்கான பாடசாலைகளை ஆரம்பிக்கும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார திணைக்களத்தினருடனான விசேட கூட்டம் வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல் வைத்தியர் திருமதி.ஏ.எல்.ஏ.கசீனா, ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.அஹ்சாப், பிரதேச பாடசாலை அதிபர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக சில வீதிகள் முடக்கப்பட்டு காணப்பட்டு வரும் நிலையில் தனிமைப்படுத்தல் பகுதியில் இருந்து வரும் மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிக்க கூடாது. அத்தோடு காய்ச்சல், தடுமல், உணர்வின் வாசனையினை உணர முடியாதவர்கள் இருப்பின் அவர்களையும் அனுமதிக்காத வண்ணம் செயற்பட வேண்டும்.

அத்தோடு தற்போதைய கொரோனா காலத்தில் மாணவர்கள் கைக்கொள்ள வேண்டிய விடயங்கள், பெற்றோர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதிபர், ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்ட வழிகாட்டல் அறிவுறுத்தல்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன்;, கொரோனா பரவலைத் தடுப்பதற்காக எல்லோரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் கூறப்பட்டது.

மேலும் ஓட்டமாவடி பிரதேசத்தில் டெங்கு தாக்கமும் அதிகரித்து காணப்படும் நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் மற்றும் பிரதேச சமூக மட்ட அமைப்புக்கள் என்பவற்றினை இணைத்து பாடசாலையினை சுத்தம் செய்து டெங்கு புகை விசிறில் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு அதிபர்கள் உடனடியாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நீண்டகாலமாக மாணவர்களுடைய கல்வி நடவடிக்கையினை தொடர்ச்சியான முறையில் முன்னெடுக்கப்படாமல் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இம்முறை மணவர்களின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கென முழு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்