73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு!

கொரோனா பரவலுக்கு மத்தியில் இம்முறையும் 73ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறும்
என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணர்தன தெரிவித்தார்.

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின கொண்டாட்டங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும்
வகையில் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (18) ஊடக அமைச்சின் கேட்போர்
கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அங்கு மேலும் கருத்து வௌளியிட்ட பாதுகாப்பு அமைச்சர், “உலகம் முழுதும்
கொரோனா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ள போதிலும் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி 4ஆம் திகதி
கொண்டாடப்படுவதைப் போன்று வழமைப் போன்று கம்பீரம் குறையாதவாறு அதேவேளை கடுமையான
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை
நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை சுதந்திர தின மரியாதை அணி வகுப்பில் இராணுவம், கடற்படை, விமானப்படை,
பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புபடை மற்றும் தேசிய மாணவர் படையணி
என்பவற்றின் சார்பில் 7 ஆயிரத்து 630 படைவீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.

கடந்த வருடத்தைப் போன்று சுதந்திர சதுக்கத்தில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் இடம்பெறும்.
ஜனாதிபதி கோட்டாபய ராபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் வெளிநாட்டு விசேட
பிரதிநிதிகள் நிகழ்வின் பிரதம பங்குபற்றாளர்களாக இருப்பார்கள்.

சுதந்திர தின அணிவகுப்புக்கள் மற்றும் கலாசார நிகழ்வுகளில் கலந்து கொள்கின்ற
அனைவருக்கும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும்.

சுதந்திர தினத்திற்கு முன்னர் நடைபெறும் மத வழிபாடுகள் பெப்ரவரி 2ஆம் திகதி சுதந்திர
சதுக்கத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும். பெப்ரவரி 3ஆம் திகதி மருதானை விகாரையில்
தான நிகழ்வு இடம்பெறும். ஏனைய சர்வமத வழிபாடுகள் சுதந்திர தினத்தன்று நடைபெறும்.

அதற்கமைய பௌத்த மத வழிபாடுகள் காலை 6.30க்கு நாரஹேன்பிட்டியவிலுள்ள அபயராம
விகாரையிலும் இந்து மத வழிபாடுகள் பம்பலபிட்டி புதிய கதிரேசன் ஆலயத்திலும் 6.35க்கு
இஸ்லாம் மத வழிபாடுகள் கொழும்பு-4 நிமல்பாதை மஜ்மாயில் கமிராத் ஜூம்மா பள்ளிவாசலிலும்
7.15 க்கு கிருஸ்தவ வழிபாடுகள் பொரளை தேவாலயத்திலும் நடைபெறும்.

அதனையடுத்து முப்படையினரின் மரியாதை அணிவகுப்பு நடைபெறும். இதில் 3 ஆயிரத்து 171
இராணுவத்தினரும் 808 கடற்படையினரும் 997 விமானப்படையினரும் 664 பொலிஸாரும் 432
விசேட அதிரடிப்படையினரும் 558 சிவில் பாதுகாப்புபடையினரும் 336 தேசிய மாணவர்
படையணரும் பங்குபற்றுவார்கள். இதனைத் தொடர்ந்து கலாசார அணிவகுப்பு இடம்பெறும்.

இதில் முப்படை, சிவில் பாதுகாப்புபடை, பொலிஸ், தேசிய இளைஞர் பாதுகாப்புபடை மற்றும்
மாகாணசபை கலாசார சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடகக் கலைஞர்கள் உள்ளிட்ட 341 பேர்
பங்குபற்றுவார்கள். இம்மாதம் 29, 30, 31ஆம் திகதிகளிலும் பெப்ரவரி 1, 2, 3 ஆம்
திகதிகளிலும் சுதந்திர சதுக்கத்தில் ஒத்திகைகள் இடம்பெறும்.

அத்தோடு சுதந்திர தினத்தன்று இடம்பெறும் முக்கிய நிகழ்வாக டீ.எஸ்.சேனாநாயக்கவின்
உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் வைபவம் காலை 7.15 மணிக்கு முன்னாள் சபாநாயகர்
கருஜயசூரியவின் பங்குபற்றலுடன் நடைபெறும்.

பெப்ரவரி முதலாம் திகதி முதல் 7ஆம் திகதி வரை சகல அரச திணைக்களங்களிலும்
நிறுவனங்களிலும் தேசிய கொடி பறக்கவிடப்படுவதோடு, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில்
மின்விளக்கு அலங்காரங்களையும் செய்ய முடியும்.

இவ்வாறு எந்தவிதமான நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் குறைந்தளவானோரின் பங்குபற்றலுடன்
சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமையவே முன்னெடுக்கப்படும்” என அவர் மேலும்
தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.