ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு விளையாட்டு மைதானக்காணி அடையாளப்படுத்தப்பட வேண்டும் – பிரதேச சபை உறுப்பினர் அஸீஸுல் றஹீம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி  விளையாட்டு மைதானக் காணியொன்றினை அடையாளப்படுத்தப்படுத்துமாறு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஜி.அஸீஸுல் றஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒட்டமாவடி பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 1989ம் ஆண்டு ஆண், பெண் பாடசாலையாக பிரிக்கப்பட்டமையினால் விளையாட்டு மைதானமாகக் காணப்பட்ட பகுதி ஆண்கள் பாடசாலையாக மாற்றம் பெற்றது.
இதன் காரணமாக ஏற்பட்ட மாணவர் அதிகரிப்பினால் வகுப்பறை நிர்மாணத்துக்காக குறித்த மைதானத்தின் பகுதியை பயன்படுத்த வேண்டிய நிலை உருவானதாலும், வெவ்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதனாலும், இடப்பற்றாக்குறை ஏற்பட்டு, மாண்வர்கள் விளையாட்டுப்பயிற்சிகளில் ஈடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் கடந்த காலங்களில் பல மாணவர்கள் மாகாண, தேசிய மட்டப்போட்டிகளில் பங்கு பற்றி சாதனை புரிந்து பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
தற்போது மாணவர்கள் விளையாட்டுப்பயிற்சிகளில் ஈடுபட மைதானமின்மை காரணமாக பாடசாலையின் விளையாட்டுத்துறை வீழச்சியடைந்து வருவதோடு, போதைவஸ்து பாவனை போன்ற சமூகச்சீர்களை நோக்கி மாணவர்கள் செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.
அத்துடன் ஆசிரியர், மாணவர்களுக்கான விடுதி அமைப்பதற்கான நிதியினை கல்வியமைச்சு ஒதுக்கியுள்ள போதும், இடமின்மை காரணமாக விடுதியினை அமைத்துக் கொள்ள முடியாத சூழல் காணப்படுகின்றது.
இதன் காரணமாக வெளிப்பிரதேசங்களிலிருந்து வரும் ஆசிரியர்களும், மாணவர்களும் பெரிது அசெளகரியங்களுக்குள்ளாவதுடன், கற்பித்தல், கற்றல் செயற்பாடுகளிலும் பாதிப்பு ஏற்படுகின்றது.
அத்தோடு, அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தினுள் ஓட்டமாவடி தேசிய பாடசாலை உள்வாங்கப்பட்டுள்ளமையினால் பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு பாரிய நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை நடைமுறைப்படுத்தி பாடசாலை மாணவர்களின் விளையாட்டுத்துறையினை மேன்படுத்துவதற்கான வாய்ப்பு மைதானமின்மை தடைப்படுகின்றது.
ஆகவே, இது விடயத்தில் மேலான இச்சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
அத்தோடு, முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதர் அவர்களால் பிரதேச கல்வி அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு நாவலடி பிரதேசத்தில் ஒதுக்கப்பட்ட பத்து ஏக்கர் காணி பிரதேச சபையின் பராமரிப்பின் கீழ் வருமிடத்து, அதன் ஒரு பகுதியை ஓட்டமாவடி தேசிய பாடசாலைக்கு மைதானத்துக்கு ஒதுக்கி கொடுத்தல் எனவும், அதற்கான கோரிக்கையினை மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் முன்வைத்தல் எனவும் சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.