கல்முனை மாநகர சபையில் திருத்தியமைக்கப்பட்ட உழவு இயந்திரம் கையளிப்பு!

கல்முனை மாநகர சபையில் மிகவும் பழுதடைந்து, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் ‘மீள் உருவாக்கம்’ எனும் திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்டு, பாவனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு திருத்தியமைக்கப்பட்ட உழவு இயந்திரம் ஒன்று, இன்று திண்மக்கழிவகற்றல் சேவைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எஸ்.எம்.நிஸார், ஏ.சி.ஏ.சத்தார், எம்.எம்.பைரூஸ், சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அர்ஷாத் காரியப்பர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.

எமது மாநகர சபையில் பல வருடங்களாக மிகவும் பழுதடைந்த நிலையில், துருப்பிடித்து, உருக்குலைந்து, பாவனைக்குதவாமல் காணப்படுகின்ற பல இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் மாநகர மேயரின் ‘மீள் உருவாக்கம்’ எனும் எண்ணக்கருவுக்கமைவாக அவரது நேரடி ஆலோசனை, வழிகாட்டலில் எமது வாகன திருத்துநர்களின் பங்களிப்புடன், குறைந்த செலவில் திருத்தியமைக்கப்பட்டு, சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தலைமை உத்தியோகத்தர் ஏ.ஏ.எம்.அஹ்சன் தெரிவித்தார்.

ஏற்கனவே 04 உழவு இயந்திரங்கள் இவ்வாறு மீள் உருவாக்கம் செய்யப்பட்டு, அவற்றுக்கான பெட்டிகளும் புதிதாக தயாரிக்கப்பட்டு, அவை திண்மக்கழிவகற்றல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் இச்சேவை கடந்த காலங்களை விட சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சமீபத்தில் ஸ்கிப் லோடர் (Skip Loader), ரோட் லோடர் (Road Loader), குபோடா ட்ரெக்டர் (Kubota Tractor) போன்றவையும் இத்திட்டத்தின் கீழ் திருத்தியமைக்கப்பட்டு, சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.