மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது-ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

மாகாண சபை தேர்தலை பிற்போடுவதற்கான தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. கொவிட்-19 வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் பொதுத்தேர்தலை நடத்தியதை போன்று பாதுகாப்பான முறையில் மாகாண சபை தேர்தலையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணத்தை தவிர ஏனைய மாகாணங்ளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றி பெறும் என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தை பலவீனப்படுத்தும் நோக்கில் எதிர்க்கட்சியினரும், அரச சார்பற்ற அமைப்புக்களும் கூட்டணியமைத்து  அரசாங்கத்துக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கொள்கை அடிப்படையில் ஆட்சியமைத்துள்ளார். ஆகவே வெறுப்பு பேச்சுக்களினால் அரசாங்கத்தை எவராலும் பலவீனப்படுத்த முடியாது.

மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. மார்ச் மாதம் மாகாண சபை தேர்தலை நடத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்தது. மார்ச் மாதம் முதல் வாரத்தில் தேர்தலை நடத்த அமைச்சரவை மட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. எதிர்பாராத வகையில் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தீவிரமடைந்த காரணத்தினால் தேர்தலை தற்காலிகமாக பிற்போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவதை காட்டிலும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமானதொன்றாக கருதப்பட்டது என்றார்.

மேலும், தேர்தலை கண்டு அஞ்ச வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது. 2018ஆம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் அப்போதைய அரசாங்கம் அடைந்த தோல்வி மாகாண சபை தேர்தலை காலவரையறையின்றி பிற்போடுவதற்கு  பிரதான காரணியாக அமைந்தது. இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எதிர்க்கட்சி பதவியில் இருந்துக் கொண்டு முழு ஆதரவையும் வழங்கினார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் சுபீட்சமான எதிர்கால கொள்கைத்திட்ட செயற்திட்டங்கள் தாமதிக்கப்பட்டுள்ளன. தற்போது முன்னெடுக்கபபடும் அபிவிருத்தி பணிகளை துரிதமாக நிறைவு செய்யுமாறு அனைத்து தரப்பினருக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.