யுத்தப் பாதிப்பு கிளிநொச்சியில் பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கலில் தாமதங்கள் ஏற்படுத்துகிறது- கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்

யுத்தத்தினால் கிளிநொச்சி மாவட்டம் பாதிக்கப்பட்டமையால் பிறப்புச் சான்றிதழ்களைப் பதிவுசெய்வதில் தாமதங்கள் ஏற்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பித்துவைத்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அனுசரணையில், கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாழும் மக்களில் பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைப்பதற்கான நடமாடும் சேவை இன்று ஆரம்பமானது.

கரைச்சிப் பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், பிரதி பதிவாளர் நாயகம், கிராம சேவையாளர்கள், பதிவாளர் திணைக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நடமாடும் சேவை ஊடாக 150இற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெறுகின்றனர்.

இதன்போது, உரையாற்றிய ரூபவதி கேதீஸ்வரன், “பிறப்புச் சான்றிதழ் என்பது எமது பிறப்பினை உறுதிப்படுத்தும் விடயமாகும். அதனைப் பெற்றுக்கொள்வதில் பெற்றோர் அக்கறையின்றி செயற்படுகின்றனர். அவர்களுக்கான போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையே இதுவாகும்.

வைத்தியசாலையில் பிறப்புப் பதிவு செய்யப்படுகின்ற போதிலும் அதன் பிரதியை பதிவாளர் நாயகத்திற்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பலர் அக்கறை கொள்வதில்லை. வைத்தியசாலையில் வழங்கப்படும் சான்றிதழைப் பயன்படுத்தி பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்துவிட்டு, தாம் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டதாகக் கருதுகின்றனர்.

உண்மையில் குறித்த சான்றிதழை பிரதேச செயலகங்களில் உள்ள பதிவாளர் நாயகத்தின் அலுவலகங்கள் ஊடாகப் பதிவு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படாமையால் பல குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்.

மாவட்டச் செயலகங்களில் இடம்பெறும் கூட்டங்களில் இவ்வாறான நிலை தொடர்பாக எனது கவனத்திற்கு உத்தியோகத்தர்களால் கொண்டு வரப்படுகிறது. இவ்விடயத்தில் பெற்றோர் அவதானமாகச் செயற்படாதவிடத்து பிள்ளைகள் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்.

இதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டதால் பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. பதிவுகள் இடம்பெற்றிருந்தாலும் யுத்தத்தின்போது தொலைந்துள்ளமையால் இவ்வாறான நிலை காணப்படுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.