விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்ய பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு இலகு கடன் திட்டம்: வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தனவால் வழங்கி வைப்பு

விவசாயிகளிடம் இருந்து நெல்லினை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்துவதற்காக வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சௌபாக்கியா கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (13) நடைபெற்ற நிகழ்வில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர்களிடம் வர்த்தக அமைச்சர் பந்துலகுணவர்த்தன, கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண மற்றும் வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோர் இணைந்து குறித்த கடன் திட்டத்திற்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.

வடமாகாணத்தில் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லினை உத்தரவாத விலையில் பெற்று அதனை களஞ்சியப்படுத்தி மீண்டும் மக்களுக்கு உத்தரவாத விலையில் அரிசியினை வழங்கும் முகமாக பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாட்டை ஊக்குவிக்க ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைக்கு அமைவாக கூட்டுறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக வடமாகாணத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 8 பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கே இலகு முறையில் செலுத்தும் வகையில் சௌபாக்கியா கடன் திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், பலநோக்கு கூட்டுறுவுச் சங்கங்களை வினைத்திறன் மிக்கதாகவும், இலாபமீட்டும் நிறுவனங்களாகவும் மாற்றுவதுடன் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நிலையங்களாக மாற்றியமைப்பது தொடர்பில் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது பலநோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுடன் அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கலந்துரையாடினர்.

இந்நிகழ்வில் அமைச்சர்களுடன் கூட்டுறவு திணைக்கள உயர் அதிகாரிகள், வடமாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளர், வடமாகாண பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.