தமிழர்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகர செயற்படுகிறார்- கஜேந்திரன்

தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாகவே சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரன் குறித்து பேசுவதற்கு இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் எட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சரத் வீரசேகரவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் பி.பி.சி செய்தி பிரிவுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “அமைச்சர் சரத் வீரசேகர, மோசமான இனவெறி சிந்தனைக்குள் புதைந்துள்ளார்.

ஆகவேதான் இவ்வாறான கருத்துகளை அவர் வெளியிட்டு வருகின்றார். இலங்கையில் 30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தின் போது, தமிழர்கள் மீதுஇலங்கையின் முப்படைகளே தாக்குதல்களை நடத்தியது.

ஆகவேதான் இலங்கை அரச படைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது. அதனை சரத் வீரசேகரவும் எதிர்கொள்ள வேண்டும்.

இதேவேனை தமிழ் மக்களுக்காக போராடி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்வதை தடுப்பதற்கும் தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்குவதற்காகவுமே சரத் வீரசேகர இவ்வாறான திட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றார்.

இது ஜனநாயக விரோத செயற்பாடாகும். அவ்வாறான சட்டமூலம் கொண்டு வரப்படும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் செயற்படுவோம்.

இவ்வாறான செயற்பாடொன்றை இலங்கை அரசாங்கம் செய்யும் பட்சத்தில், சர்வதேசத்திற்கு முன்பாக தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.