வடக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் மார்ச்சில் ஆரம்பம் – கேதீஸ்வரன்

வடக்கு மாகாணத்தில் கொவிட் தடுப்பூசி மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணியை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்த அவர், “108 மையங்களில் இந்த தடுப்பூசி மருந்து வழங்கல் நடவடிக்கையை முன்னெடுக்க முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொவிட் -19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி மருந்து வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் தடுப்பூசி வழங்கப்படவேண்டியவர்களின் பட்டியலை வழங்கும் பணி பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களிடமிருந்து பட்டியலைப் பெற்று 108 மையங்களில் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை வழங்கும் பணி மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்.

தடுப்பூசி மருந்தை ஏற்றுவதில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை. வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் 85 சதவீதத்துக்கும் மேற்பட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் தடுப்பூசி மருந்தை எடுத்துள்ளனர். அவர்களுக்கு எந்த ஒவ்வாமையும் ஏற்படவில்லை.

பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் தவிர்ந்த ஏனையோர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

கோவிட் -19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டு ஒத்துழைக்கவேண்டும்.

இதேவேளை, கொழும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது

உடுப்பிட்டி இமயாணனைச் சேர்ந்த பெண் ஒருவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை நேற்றிரவு கொழும்பிலிருந்து அறிவிக்கப்பட்டது.

கொழும்பில் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் அவர் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது உடுப்பிட்டி இமயாணனின் உள்ள வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

அவரது பிசிஆர் பரிசோதனை அறிக்கை நேற்று கிடைத்துள்ளது. அதில் அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணத்துக்கு வெளியே தங்கியுள்ளவர்கள் பிசிஆர் மாதிரிகளை வழங்கிவிட்டு இங்கு வருவதைத் தவிர்க்கவேண்டும்.

அவசர தேவையால் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தால் தங்கியிருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவலை வழங்கி சுயதனிமைப்படுத்தல் விதிகளை மதித்து வெளியில் நடமாடுவதைத் தவிர்க்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.