ஜனாசா விடயம் தொடர்பில் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களுக்கு எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை
(பாறுக் ஷிஹான்)
கொவிட் 19 காரணமாக முஸ்லிம்கள் மாத்திரம் மரணிக்கவில்லை. கிறிஸ்தவர்கள், தமிழர்கள் மற்றும் பௌத்தர்களும் மரணிக்கின்றார்கள். எனவே, பாராளுமன்றத்தில் பிரதமர் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டுமென, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.
எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள மத்திய குழு காரியாலயத்தில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துரைக்கையில், “சர்வதேசத்தின் அழுத்தத்தால்தான் ஜனாசா அடக்கத்துக்கு பாராளுமன்றத்தில் வைத்து பிரதமர் அனுமதி வழங்கியுள்ளதாக கருத்துப்பட சமூக ஊடகங்களில் இன்று பேசப்பட்டு வருகின்றது. உண்மையில் சர்வதேசத்துக்கு அச்சப்பட்டு வாக்குறுதியை கொடுக்கின்ற தலைவராக மஹிந்த ராஜபக்ஷ இருந்ததில்லை.
“அவ்வாறு சர்வதேச நாடுகளுக்கு பயந்திருந்தால், யுத்தத்தை அவரால் வெற்றி கண்டிருக்க முடியாது என்கின்ற உண்மையை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
“நாட்டில் முஸ்லிம்களின் மார்க்கத்தில் ஜனாசா நல்லடக்கம் கட்டாயக்கடமை என்ற கோட்பாடுகளை மையப்படுத்தி, அதீதமான ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றார்கள். ஏனெனில், அது மார்க்கத்தின் கட்டாயக்கடமையாக இருக்கின்றமையாகும்.
“இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரதமர் வாக்குறுதி அளித்த விடயம் நாட்டிலுள்ள அனைவருக்கும் அவர் வழங்கியிருக்கின்றார். ஆனால், முஸ்லிம்களுக்கு மாத்திரம் அல்ல என்பதை சகல தரப்பினரும் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரதமர் பாராளுமன்றத்தில் அளித்த வாக்குறுதியானது அனைவருக்கும் பொதுவானது என்பதையே நாம் கருத வேண்டும்.
“எந்தவொரு சந்தரப்பத்திலும் பிரதமர் தனிப்பட்ட முறையில் முஸ்லிம்களுக்கு ஜனாசா விடயம் தொடர்பில் எவ்வித வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை என்பதை அரசியல் தலைவர்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்” என்றார்
கருத்துக்களேதுமில்லை