மட்டக்களப்பு மக்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருவதாக இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்த திட்டவட்டம்

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்கும் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று (15) திங்கட்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இடம் பெற்றது.
எமது நாட்டின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களது சுபீட்சத்தின் பால் நாட்டை கட்டியெழும்பும் திட்டத்திற்கு அமைவாக இலங்கையில் இருக்கும் அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் நோக்கில் மட்டக்களப்பில் இடம் பெற்ற இந்த நடமாடும் சேவையானது கிராமிய பொருளாதார  மேம்பாட்டு  இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் விநியோக திட்டங்கள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர்  சனத் நிசந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் உட்பட்ட அமைச்சின் உயரதிகாரிகளும், பிரதேச செயலாளர்களும், உதவிப் பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது குடிநீரை பெற்றுக்கொள்வதில் சிரமத்தினை எதிர்கொண்டுவரும் கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும், தனிநபர்களும் தமது விண்ணப்பங்கள் மற்றும் கோரிக்கைகளை இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்தனர். இவற்றில் அனேகமான கோரிக்கைகளுக்கு குறித்த இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டதுடன், தமது அமைச்சில் போதியளவு நிதி இருப்பதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மாவட்டத்தில் உள்ள குடிநீர்த் தேவை அனைத்தையும் ஒரு திட்ட வரைபாக தருமிடத்து அவற்றிற்கான தீர்வை தான் வெகு விரைவாக வழங்குவதாக தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.