இலங்கையில் பா.ஜ.க. ஆட்சி வெறும் வதந்தியே! -உதய கம்மன்பில

இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சி இலங்கையில் ஆட்சியமைக்கும் திட்டத்தில் இருக்கின்றது என வெளியாகும் தகவல்கள் வெறும் கட்டுக்கதையே என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் வெளியிட்டுள்ள கருத்தானது உத்தியோகபூர்வமானது அல்ல எனவும், இதனால் இது தொடர்பாக இலங்கை அரசின் நிலைப்பாட்டைக் கூற முடியாது எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் ஆட்சி அமைக்கும் திட்டத்தில் பா.ஜ.க. உள்ளது என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் என்று திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் டெப் தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பாக, கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, “இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவ்வாறு கூறியுள்ளார் என்று திரிபுரா மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் கருத்து வெளியிட்டுள்ளாரே தவிர, அமித் ஷா எங்கேனும் அவ்வாறு கூறியுள்ளார் என்று செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. இதனால் இந்த விடயத்தை நாங்கள் வெறும் வதந்தியாகவே பார்க்கின்றோம்” – என்றார்.

உத்தியோகபூர்வமாக பாரதிய ஜனதாக் கட்சி அவ்வாறு அறிவிக்குமாக இருந்தால் இலங்கை அரசு அது பற்றி பதிலளிக்கும் என்றும் அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.