நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானங்கள்

2021.02.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரச்சார பிரிவினால் சிங்கள மொழியிலான அமைச்சரவை தீர்மான ஆவணம் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.)

01. 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் ‘விசேட வைப்புக் கணக்கு’ தொடர்பான விளக்கக் கட்டளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

வெளிநாட்டு நாணயத்தை நாட்டுக்கு அனுப்புவதை ஊக்குவிப்பதற்காக ‘விசேட வைப்புக் கணக்கு’ ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன், குறித்த கணக்குகளைத் தொடர்ந்து பேணுவதற்காகவும், மேலதிக வட்டியை செலுத்துவதற்காகவும் இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விசேட வைப்புக் கணக்கை ஆரம்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியை 2020 ஒக்ரோபர் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் மேலும் 06 மாதங்களுக்கு நீடிப்பதற்காக, 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 2020-11-17 ஆம் திகதிய 2202ஃ07 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளையை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. அடுக்குமாடி வீட்டு நிர்மாணிப்பு மேம்பாட்டுக்காக கொத்தணி வீட்டு வளாகத்தை அபிவிருத்தி செய்தல்

கொழும்பு நகரில் நிலவுகின்ற காணித் தட்டுப்பாட்டால் அதிகரித்துவரும் வீட்டு வசதிகளுக்கான கேள்வியைப் பூர்த்தி செய்வதற்குப் பொருத்தமான காணிகளை அடையாங் காண்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 12 ஏக்கர் காணித் துண்டில், அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் நிர்வாகத்திலுள்ள கெப்பிட்டிபொல வீதி, கொழும்பு 05 இல் அமைந்துள்ள 1976 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட 176 வீட்டு அலகுகள் மற்றும் 15 பங்களா விடுதிகளுடன் கூடிய கொத்தணி வீடுகள் தற்போது அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ இல்லத் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறித்த வீடுகளில் அதிகமானவை பழுதடைந்த நிலையில் காணப்படுவதுடன், அவை முழுமையாக திருத்தம் செய்யப்பட வேண்டுமென தேசிய கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. தற்போது 700 அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ இல்லத்தைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு குறித்த 12 ஏக்கர் காணியில் 02 ஏக்கர்களை அரச ஊழியர்களுக்கான 400 உத்தியோகபூர்வ இல்லங்களை அமைக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு மற்றும் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தின் கீழ் தற்போது நகர அபிவிருத்தி அதிகாரசபையால் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்தியதர வகுப்பினருக்கான வீடமைப்பு முறைமையில் 100 வீடுகள் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எஞ்சுகின்ற 10 ஏக்கர் காணியை அபிவிருத்தி செய்வதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்படவுள்ளது. முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் மற்றும் அரச சேவைகள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனத்திற்கும் (Lahore School of Economics) புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எட்டுதல்

இரு தரப்புக்கும் பயன்கள் கிடைக்கும் வகையில் ஆராய்ச்சிப் பொருட்கள், வெளியீடுகள் மற்றும் தகவல் பரிமாற்றம் செய்தல், இரு நிறுவனங்களும் கூட்டாக மற்றும் தனிப்பட்ட ஆய்வுக் கருத்திட்டங்களை ஊக்குவித்தல், திறன்கள் மற்றும் இயலுமைகளுடன் கூடிய மாணவர் பரிமாற்று நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாஹோர் பொருளாதார நிறுவனத்திற்கும் (Lahore School of Economics) புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக கல்வியலாளர் குழு ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைக்கான முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை (Transit Card) அறிமுகம் செய்தல் மற்றும் கட்டண அறவீட்டு இலத்திரனியல் முறைமையை நடைமுறைப்படுத்தல்

இலங்கையில் பொதுப் போக்குவரத்து துறையில் நாணய அலகு கட்டண அறவீட்டு முறை நடைமுறையில் இருப்பதுடன், அதனால் ஏற்பட்டுள்ள சிரமங்களைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் பொதுப் போக்குவரத்துப் பேரூந்துகள் மற்றும் புகையிரதப் பாவனைக்காக முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை அறிமுகம் செய்வதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய செயற்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்காக 2018 ஒக்ரோபர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் அதன் கீழுள்ள 100% வீதம் உள்ளூர் கம்பனியான லங்கா க்லியர் தனியார் நிறுவனம் முன்மொழியப்பட்டுள்ள முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டை கருத்திட்ட யோசனை சமர்ப்பித்துள்ளதுடன், குறித்த கருத்திட்ட யோசனையின் அடிப்படையில், போக்குவரத்துத் துறைக்கான முற்கொடுப்பனவு பரிவர்த்தனை அட்டையை நாடளாவிய ரீதியில் பயன்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மீள்பிறப்பாக்க எரிசக்தி மேம்பாட்டின் கீழ் விநியோக மின்மாற்றிகளுடன் (ட்ரான்ஸ்போமர்) இணைப்புச் செய்து தனியார் துறையினரின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் 100kw சூரிய மின்னுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம்

‘சுபீட்சத்தின் நோக்கு’ அரச கொள்கைப் பிரகடனத்திற்கமைய செயற்பட்டு 2030 ஆண்டாகும் போது ஒட்டுமொத்த மின்சாரத் தேவையின் அதிகளவை மீள்பிறப்பாக்க எரிசக்தி மூலங்களிலிருந்து பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த மீள்பிறப்பாக்க எரிசக்தி கருத்திட்டம் பெரும்பாலும் தனியார் துறையினரின் முதலீட்டின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை மின்சார தனியார் கம்பனிக்கு சொந்தமான 7000 விநியோக மின்மாற்றிகளுக்காக (ட்ரான்ஸ்போமர்) நிலப்பரப்பில் இயங்கும் சூரிய மின் நிலையத்துடன் இணைப்புச் செய்து மீள்பிறப்பாக்க மின்னுற்பத்தியை மேற்கொள்ளும் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்ட ஒரு மின்மாற்றிக்கு ஒரு சூரிய மின் உற்பத்தி கருத்திட்டம் என்ற வகையில் நடைமுறைப்படுத்தவும், அதற்கு ஏற்புடைய பிரதேசத்தின் பிரதேச செயலகங்களில் வியாபாரப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு போட்டித்தன்மையின் அடிப்படையில் விலைமனு கோரப்பட்டு முதலீட்டாளர்களைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு 12 மில்லியன்கள் முதலிடப்பட வேண்டியுள்ளதுடன், குறித்த மின்மாற்றிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள 40 பேர்ச்சஸ் காணித்துண்டில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதற்கமைய, மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டம் 18 மாதங்களில் நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. சம்பிரதாய மற்றும் கிராமிய கைத்தொழில் ஊக்குவிப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்

பாரம்பரிய கைத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தங்களின் உற்பத்திகளை விரிவாக்குவதற்காக ஒத்துழைப்பு வழங்கும் வகையில் விசேட பொருட்களின் சந்தைப்படுத்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக 2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 2,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, பிரம்பு, பித்தளை, மட்பாண்டம், மரத்தளபாடங்கள் மற்றும் கிராமியக் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு 2021-2025 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அமைச்சால் கீழ்க்காணும் கருத்திட்டங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், குறித்த கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• கிராமியக் கைத்தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை பயிரிடும் நிகழ்ச்சித்திட்டம்

• தேசிய மூலப்பொருள் வங்கியை தாபித்தல்

• ஒரு கிராமத்தில் ஒரு தொழில் முயற்சியாளரை உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டம்

• மரத்திலான ஆக்கங்கள் மற்றும் வடிவமைப்புக்களுக்கான நிலையத்தை தாபித்தல்

• கிராமிய மற்றும் பாரம்பரிய கைத்தொழில் கிராமங்களை ஒன்று திரட்டிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்

• கிராமிய கைத்தொழிலுக்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தை ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம்

07. மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்திற்கு விமானக் கம்பனிகளைக் கவர்ந்திழுப்பதற்கான விசேட சலுகை ஏற்பாடுகள்

சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையால் தயாரிக்கப்பட்டுள்ள விசேட நேர அட்டவணைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் சர்வதேச வாடகை விமானப் பயண நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு, இரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் இறக்கம் மற்றும் விமானங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலிருந்து விடுவிப்பதற்காக 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சலுகைக் காலத்தை மேலும் 2021 ஆம் ஆண்டு யூலை மாதம் 19 திகதி வரை நீடிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குச் சட்டக் கோவையை திருத்தம் செய்தல் (பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிப்பதற்கு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் வழங்கல்)

ஒரு சில நீதிமன்றப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொலிசாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை கண்காணிப்பதற்காக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் சமூகமளிப்பதற்கு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.