நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபர் விளக்கமறியலில்!

(எப்.முபாரக் )
திருகோணமலை – கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 91ஆம் கட்டை பகுதியில் நடுவீதியில் பட்டப்பகலில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய நபரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவான் விஷானி தேனபது முன்னிலையில் திங்கட்கிழமை   (22)குறித்த சந்தேநபர் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கடமையாற்றி வரும் கந்தளாய் பகுதியை சேர்ந்த தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத் (49 வயது) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் வைத்தியசாலையில் சிற்றூழியராக கடமையாற்றி வரும் உக்குபண்டா அப்புஹாமிலாகே சிறானி புஷ்பலதா (44 வயது) தனது கணவரான தொலஸ்வாகே கெதர சமிந்த ஜயலத்தை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதேவேளை கணவரின் தாக்குதலில் காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனைக்கான அனுமதி நீதிமன்றத்தினால் கிடைக்கப் பெற்றவுடன் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்கவுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்