சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு சட்ட நடவடிக்கை!

இந்தியா உட்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பிரதேசத்திற்குள் பிரவேசிக்கும் மீன்பிடி படகுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை கடுமையாக்கவுள்ளதாக மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்ஜன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

சட்டவிரோதமாக கடல் எல்லையை மீறுகின்ற நடவடிக்கைள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

2014 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் தடையை விதித்தது. பின்னர் அத்தடையை அந்த ஒன்றியம் நீக்கிய போதிலும் பல நிபந்தனைகளை விதித்தது.

சட்டங்கள் இருந்தாலும் அதனை அமுல்படுத்துகையில் ஏற்படுகின்ற பலவீன நிலைமை மீன் ஏற்றுமதியில் அது தாக்கம் செலுத்தும் என்ற எச்சரிக்கையையும் அந்த சங்கம் விடுத்துள்ளது.

அந்த நிபந்தனைகளில் 97 வீதத்தை நிறைவேற்றியிருக்கின்றோம். உதாரணமாக 2017இல் இலங்கை மீனவர்கள் இந்திய கடலோரத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் நாடு திரும்பிய பின்னர் அவர்களுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்கிற நிபந்தனை அதில் உள்ளது.

இருந்த போதிலும் அந்த நிபந்தனை அமுல்படுத்தப்படவில்லை.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டரீதியான முறையில் பிரவேசிக்கின்ற மீன்பிடி படகுகள், சட்டவிரோத கடத்தல்கள், குறிப்பாக ஆயுதங்கள், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட விடயங்களை கொண்டுவருகின்ற மீன்பிடிப்படகுகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

இதில் அமுல்படுத்த வேண்டிய சில பரிந்துரைகளை கடற்படை வழங்கியுள்ளது.

மீன்பிடிப் படகுகள் பிரவேசம் மற்றும் வெளிச்செல்லல் என்பதை அவதானிக்கக்கூடிய வகையிலான இயந்திரங்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு இலவசமாக வழங்க இணங்கியுள்ளது.

4200 இயந்திரங்களை அவுஸ்திரேலியா எதிர்வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.