புதிய அரசியலமைப்பு தொடர்பாக கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது – திஸ்ஸ விதாரன

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள கோரிக்கைகள் ஒருபோதும் நிறைவேறாது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் கூட்டணிக்குள் உள்ள கட்சிகள் தனிப்பட்ட முறையிலும், கூட்டணி அடிப்படையிலும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமது கட்சி நிலைப்பாட்டை முன்வைத்துள்ளன.

புதிய அரசியலமைப்பில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.

அதேநேரம், தேசிய பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ் தலைமைகள் யோசனைகளை முன்வைக்க வேண்டும்.

புதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முன்வைத்துள்ள யோசனை முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது.

நடைமுறைக்கு சாத்தியப்படாத வகையில் யோசனைகளை முன்வைப்பதால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை கிடைக்கப் பெறாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

முரண்பாடற்ற வகையில் பெற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்துவது அவசியமாகும்.

இனங்களுக்கு மத்தியில் தற்போதும் காணப்படும் இனப்பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு காண்பது கட்டாயமாகும்.

ஆகவே புதிய அரசியலமைப்பின் ஊடாக தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்துகொள்ள வேண்டும்.

எனவே, தமிழ் தலைமைகள் தற்போது ஒரு சில விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு தீர்வு காண ஒன்றினைய வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.